அமித் ஷாவை விமர்சித்த யதீந்திராவுக்கு பா.ஜ., தலைவர்கள் கண்டனம்
அமித் ஷாவை விமர்சித்த யதீந்திராவுக்கு பா.ஜ., தலைவர்கள் கண்டனம்
ADDED : மார் 29, 2024 10:59 PM
பெங்களூரு: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, சர்ச்சைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்த முதல்வர் சித்தராமையாவின் மகன் யதீந்திராவுக்கு பா.ஜ., தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு, மைசூரில் காங்கிரஸ் தொண்டர்கள் பிரசார கூட்டம், நேற்று முன் தினம் நடந்தது. இதில் பேசிய யதீந்திரா, “மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு குண்டர், ரவுடி. இவர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இப்படிப்பட்டவரை பிரதமர் நரேந்திர மோடி, தன் பக்கத்தில் அமர்த்திக் கொண்டுள்ளார்,” என, விமர்சித்தார்.
இவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ., தலைவர்கள் கொதிப்படைந்து யதீந்திராவை கண்டித்தனர்.
பா.ஜ., தலைவர் சலவாதி நாராயணசாமி, நேற்று கூறியதாவது:
காங்கிரசில் ரவுடி கலாசாரம் உள்ளதே தவிர, பா.ஜ.,வில் இல்லை.
லோக்சபா தேர்தலில் மைசூரு தொகுதியில், மகன் யதீந்திராவுக்கு சீட் கிடைக்க செய்வதாக உறுதி அளித்திருந்தார். ஆனால் சீட் கை நழுவியது. இதனால் விரக்தியில் யதீந்திரா, இதுபோன்று பேசுகிறார்.
இவர் சிறு குழந்தை, அரசியலில் அனுபவம் இல்லை. இத்தகையவர் பா.ஜ., மற்றும் கட்சி தலைவர்களை விமர்சிக்கிறார். பா.ஜ., வலுவாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
யதீந்திரா தன் தந்தையின் பெயரில் அரசியலுக்கு வந்தவர். ஆனால் அமித் ஷா அப்படி அல்ல. பூத் அளவில் பணியாற்றியவர். அதன்பின் உயர்பதவிக்கு உயர்ந்தவர். தந்தையின் பெயரில் அவர் அரசியலுக்கு வரவில்லை.
- சி.டி.ரவி,
முன்னாள் அமைச்சர்
யதீந்திரா படித்தவர். மத்திய உள்துறை அமைச்சரை பற்றி, இத்தகைய வார்த்தைகளை பயன்படுத்தியது சரியல்ல. இது யதீந்திராவின் அரசியல் எதிர்காலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
- எஸ்.சுரேஷ்குமார்,
எம்.எல்.ஏ.,

