முதல்வர் சித்தராமையாவிடம் பா.ஜ., - எம்.எல்.ஏ., மன்னிப்பு
முதல்வர் சித்தராமையாவிடம் பா.ஜ., - எம்.எல்.ஏ., மன்னிப்பு
ADDED : செப் 03, 2024 10:59 PM

பெங்களூரு : ஹூப்பள்ளி - தார்வாட் மேற்கு சட்டசபை தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., அரவிந்த் பெல்லத். இவர், சட்டசபை எதிர்க்கட்சித் துணை தலைவராகவும் உள்ளார்.
ஜிந்தால் நிறுவனத்துக்கு அரசு இடம் ஒதுக்கியதை கண்டித்து, ஆகஸ்ட் 24ம் தேதி நடந்த ஆர்ப்பாட்டத்தில் இவர் பேசும்போது, 'அந்த நிலம், சித்தராமையா அப்பனுடைய சொத்தா' என, காட்டமாக பேசி இருந்தார். இதற்கு, காங்., தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், முதல்வருக்கு அரவிந்த் பெல்லத் எழுதியுள்ள கடிதத்தில், முதல்வரின் கவுரவத்துக்கு எதிராக பேசிய அந்த வார்த்தை, எனக்கு கவுரவம் தராது. எனவே இந்த கடிதம் மூலம் மன்னிப்பு கோருகிறேன்' என்று குறிப்பிட்டு உள்ளார்.
இதற்கு பதிலளித்து முதல்வர் சித்தராமையா, 'எக்ஸ்' வலைதளத்தில் குறிப்பிடுகையில், '40 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் எதிர்க்கட்சிகளின் பல்வேறு குற்றச்சாட்டுகளை கேட்டுள்ளேன்.
'ஆனால், தன்னுடைய தவறை உணர்ந்து மன்னிப்பு கோரிய அரவிந்த் பெல்லத்தின் செயலை மனதார ஏற்றுக்கொள்கிறேன்.
'அவரது செயல்பாடு அரசியலுக்கு மாண்பை ஏற்படுத்தி தந்துள்ளது' என தெரிவித்துள்ளார்.