பா.ஜ., - எம்.பி., கங்கனாவுக்கு கட்சி மேலிடம் வாய்ப்பூட்டு
பா.ஜ., - எம்.பி., கங்கனாவுக்கு கட்சி மேலிடம் வாய்ப்பூட்டு
ADDED : ஆக 27, 2024 01:01 AM

புதுடில்லி: விவசாயிகள் போராட்டம் குறித்து நடிகையும், பா.ஜ., - எம்.பி.,யுமான கங்கனா ரணாவத் தெரிவித்த கருத்து, சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், 'அந்த கருத்தில் உடன்படவில்லை' எனக் கூறி, அவருக்கு பா.ஜ., கண்டனம் தெரிவித்தது.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டில்லியில், 2020 ஆக., முதல், ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, மூன்று சட்டங்களையும் திரும்ப பெறுவதாக, 2021 நவம்பரில் பிரதமர் மோடி அறிவித்தார்.
விவசாயிகள் போராட்டம் உட்பட பல்வேறு விவகாரங்களில், நடிகையும், ஹிமாச்சலின் மண்டி தொகுதி பா.ஜ., - எம்.பி.,யுமான கங்கனா ரணாவத், சமீப காலமாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து வருகிறார்.
சமீபத்தில், தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், கங்கனா ரணாவத் கூறியதாவது:
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடிய போது, மோடி அரசின் வலுவான நடவடிக்கைகள் இல்லாவிட்டால், வங்கதேசத்தில் நடந்தது, நம் நாட்டிலும் நடந்திருக்கும்.
விவசாயிகள் போராட்டத்தின் போது துாக்கிலிடுதலும், பாலியல் வன்கொடுமைகளும் நடந்தன. அந்த சட்டங்கள் திரும்பப் பெறப்பட்ட பின்னும் போராட்டங்கள் தொடர்ந்ததற்கு, சீனா, அமெரிக்கா போன்ற வெளிநாட்டு சதிகள் தான் காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கங்கனா ரணாவத்தின் இந்த சர்ச்சை பேச்சுக்கு, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்தன.
இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ., வெளியிட்ட அறிக்கையில், 'கங்கனா ரணாவத்தின் கருத்தில் கட்சி உடன்படவில்லை.
'கட்சியின் கொள்கை விஷயங்களில் கருத்து தெரிவிக்க அவருக்கு அனுமதியும் இல்லை; அதிகாரமும் இல்லை. எதிர் காலத்தில் இது போன்ற கருத்துக்களை வெளியிட வேண்டாம் என கங்கனாவுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது' என, குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஹரியானாவில், விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், கங்கனா ரணாவத்தின் இந்த சர்ச்சை பேச்சு, பா.ஜ.,வுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.
வெளிநாட்டு சதி இருப்பதாக பா.ஜ., - எம்.பி.,கங்கனா கூறுகிறார். இது குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும். அவரது கருத்தில் உடன்படவில்லை என, பா.ஜ., கூறுகிறது. அப்படி என்றால், அவரை கட்சியில் நீக்க வேண்டியது தானே.
சுப்ரியா ஸ்ரீநாத்
காங்., செய்தித் தொடர்பாளர்