'லெட்டர் பேடு' கட்சிகள் மூலம் ரூ.9,169 கோடி வரி ஏய்ப்பு
'லெட்டர் பேடு' கட்சிகள் மூலம் ரூ.9,169 கோடி வரி ஏய்ப்பு
ADDED : நவ 11, 2025 02:47 AM

புதுடில்லி: நாடு முழுதும் உள்ள அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள், பட்டயக் கணக்காளர்கள் மற்றும் இடைத்தரகர்கள் கூட்டாக செயல்பட்டு, 9,169 கோடி ரூபாய் அளவுக்கு போலி நன்கொடைகளை உருவாக்கி, வரி ஏய்ப்பு செய்துள்ளனர்.
நாடு முழுதும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள, 420 வங்கி கணக்குகளை மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் ஆய்வு செய்தது.
குறிப்பாக அந்த வங்கிக் கணக்குகளின், 'வாட்ஸாப்' தகவல்களை சோதித்ததில், வரி ஏய்ப்புக்காக நவீன முறையில் பண மோசடி செய்தது அம்பலமானது.
அதாவது, மாநிலம் மற்றும் தேசிய அங்கீகாரம் பெற தவறும் கட்சிகள், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளாக பதிவு செய்ய முடியும்.
அப்படி பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு வரும் நன்கொடைகளுக்கு வரி விலக்கு உண்டு.
இதை சாதகமாக பயன்படுத்திய சில நன்கொடையாளர்கள், அந்த அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு நன்கொடை வழங்கி, அதன் மூலம் வரி ஏய்ப்பு செய்துள்ளனர்.
இதற்கான கணக்கு வழக்குகளை பார்த்து தரும் பட்டயக் கணக்காளர்கள் மற்றும் இடைத்தரகர்களுக்கு கமிஷனும் அளிக்கப்படுகிறது.
அந்த வகையில், கடந்த 2022 - 23 மற்றும் 2023 - 24 நிதி ஆண்டுகளில் முறையே, 6,116 கோடி மற்றும் 3,053 கோடி ரூபாய் நன்கொடை வந்திருப்பதாக கூறி, அதற்கு வரி விலக்கு கேட்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அங்கீகரிக்கப்பட்ட மாநில, தேசிய கட்சிகளுக்கு வரும் நன்கொடைகளை விட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு வந்த நன்கொடை அதிகமாக இருந்ததால், மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் சந்தேகம் அடைந்தது.
இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் தான், வரி ஏய்ப்புக்காக போலி நன்கொடை ரசீதுகள் உருவாக்கப்பட்டதும் அம்பலமானது.

