பினராயி மீது தே.து.வழக்கு தொடர பா.ஜ., வலியுறுத்தல்
பினராயி மீது தே.து.வழக்கு தொடர பா.ஜ., வலியுறுத்தல்
ADDED : மார் 27, 2024 12:30 AM

பாலக்காடு:''கேரள முதல்வர் பினராயி விஜயனின் பேச்சு, தேச துரோகமும் தேர்தல் விதிமுறைகளை மீறி உள்ளதால், அவர் மீது தேச துரோக வழக்கு தொடர வேண்டும்,'' என, பா.ஜ., தேசிய நிர்வாக குழு உறுப்பினர் கிருஷ்ணதாஸ் கூறினார்.
கேரள மாநிலம், பாலக்காட்டில் பா.ஜ., தேசிய நிர்வாக குழு உறுப்பினர் கிருஷ்ணதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் அரசியலமைப்பு பாதுகாப்பு பேரணியில் பங்கேற்ற முதல்வர் பினராயி விஜயன், குடியுரிமை திருத்தச் சட்டம் முஸ்லிம்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றியுள்ளது என, பேசியது தேச துரோக குற்றமும், தேர்தல் விதிமுறை மீறலும் ஆகும். அதனால், அவர் மீது தேச துரோக வழக்கு தொடர வேண்டும்.
இதற்கு எதிராக, சட்ட ரீதியாக தேர்தல் ஆணையரை அணுக உள்ளோம். முந்தைய காலத்தில் முஹம்மதலி ஜின்னா எழுப்பிய, இரு மாநில வாதத்தை முதல்வர் தன் பேச்சால் மீண்டும் எழுப்பி உள்ளார்.
முதல்வர் நாற்காலியில் அமர, பினராயி விஜயனுக்கு தகுதி இல்லை. பாரத் மாதா கீ ஜெய் என்ற முழக்கத்தை எழுதியவர் யார் என்று தெரிந்து தான் அதை பா.ஜ. ஏற்றுக்கொண்டது.
ஆனால், அந்த வார்த்தையை முதல்வர் பினராயி விஜயனோ, அவரது கட்சியோ இதுவரை பயன்படுத்தவில்லை. அதை பயன்படுத்த அவர் தயாரா என்பதை அறிய பா.ஜ. விரும்புகிறது.
தேர்தலில் மக்களிடம் கூற ஒன்றுமே இல்லாததால், மா.கம்யூ., கட்சி வகுப்புவாதம் குறித்து பேசுகின்றனர். அதே நேரத்தில், பிரதமர் நரேந்திரமோடி அரசு, நாட்டு மக்களுக்காக செய்துள்ள வளர்ச்சி பணிகளை சொல்லி, பா.ஜ., மக்களை சந்திக்கிறது.
மாநிலத்தில் நேருக்குநேர் மோதி கொள்வதாக காட்டி கொள்ளும் காங்கிரஸ்-, இடது சாரி கட்சிகள் திரை மறைவில் கூட்டணி அமைத்து உள்ளனர்.
வயநாட்டில், காங்., சார்பில் போட்டியிடும் ராகுல் தோல்வி அடைந்தால், 'இண்டியா' கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்ல வேண்டும். வயநாட்டில் ராகுலை எதிர்த்து தோற்கடிக்க, பா.ஜ., மாநில தலைவர் சுரேந்திரன் களமிறக்கி உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.

