மகாகவி பாரதியின் கவிதைகள் துணிவைத் தூண்டின: தமிழில் பிரதமர் மோடி பதிவு
மகாகவி பாரதியின் கவிதைகள் துணிவைத் தூண்டின: தமிழில் பிரதமர் மோடி பதிவு
UPDATED : டிச 11, 2025 10:51 AM
ADDED : டிச 11, 2025 09:23 AM

புதுடில்லி: மகாகவி பாரதியின் கவிதைகள் துணிவைத் தூண்டின என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
மகாகவி பாரதியின் 143வது பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி தமிழில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மகாகவி சுப்ரமணிய பாரதியின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது கவிதைகள் துணிவைத் தூண்டின, அவரது சிந்தனைகள் எண்ணற்ற மக்களின் மனதில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டிருந்தன.
இந்தியாவின் கலாசார, தேசிய உணர்வை அவர் ஒளிரச் செய்தார். நீதியான, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தை உருவாக்க அவர் பாடுபட்டார். தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்புகளும் ஒப்பிலாதவை. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழில் வெளியிட்ட அறிக்கை; நவீன தமிழ் இலக்கியத்தின் சிற்பியான சுப்பிரமணிய பாரதியின் ஜெயந்தி தினத்தில் அவருக்கு வணக்கங்கள். காலனித்துவ அரசால் செய்யப்பட்ட அட்டூழியங்களை துணிந்து எதிர்த்தார். மகாகவி புரட்சியின் சுடரை ஏந்தி, தனது அக்னி போன்ற தேசபக்தி நிறைந்த கவிதைகளால் சுதந்திர வேட்கையை தூண்டினார்.
அதே நேரத்தில், சமூக சீர்திருத்தங்கள் மூலம் நியாயமான மற்றும் சமத்துவமான சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான இந்தியாவின் நாகரிக இலக்கை அவர் முன்னெடுத்தார். அவரது ஞானம் உத்வேகத்தின் நித்திய ஊற்றாக இருக்கும், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

