அமெரிக்காவில் விபத்தில் சிக்கி சுயநினைவு இழந்த இந்திய பெண்: வேதனையில் பரிதவிக்கும் தந்தை
அமெரிக்காவில் விபத்தில் சிக்கி சுயநினைவு இழந்த இந்திய பெண்: வேதனையில் பரிதவிக்கும் தந்தை
UPDATED : டிச 11, 2025 09:34 AM
ADDED : டிச 11, 2025 09:29 AM

வாஷிங்டன்: அமெரிக்காவில் விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு சென்ற இந்திய பெண்ணுக்கு, மருத்துவ மற்றும் சட்டரீதியான சவால்களை எதிர்கொள்ள அவரது தந்தை தனியாகப் போராடி வரும் நிலையில், சமூகக் குழுக்களிடமிருந்து அவருக்குப் பெரும் ஆதரவு பெருகி வருகிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான் ஜோஸ் பகுதியில் இந்திய பெண் ஆர்த்தி சிங் தந்தையுடன் வசித்து வருகிறார். இவர் ஒரு நிகழ்சியில் பங்கேற்று வீடு திரும்பிக்கொண்டிருந்த போது நவம்பர் 9ம் தேதி சாலையைக் கடக்கும்போது வாகனம் மோதி விபத்தில் சிக்கினார். இந்த விபத்து நடந்ததிலிருந்து அவர் சுயநினைவின்றி இருக்கிறார்.
அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு அவரது சுவாசம் மற்றும் உணவு உட்கொள்ளலுக்கு உதவும் வகையில், அவரது கழுத்து மற்றும் வயிற்றில் டாக்டர்கள் பெரிய அறுவை சிகிச்சைகளைச் செய்துள்ளனர்.
தொடர்ந்து அவரது படுக்கைக்கு அருகிலேயே அமர்ந்திருக்கும் அவரது தந்தை சுமிரன் சிங், 'என் மகள் இன்னும் கண்களைத் திறக்கவில்லை. அவள் நான் பேசுவதைக் கேட்பாள் என்ற நம்பிக்கையில் நான் தினமும் அவளிடம் பேசுகிறேன்
எனக்கு இங்கே யாரும் இல்லை. அவள் மட்டும்தான் இருக்கிறாள், அவள் கண் விழிப்பாள் என்ற நம்பிக்கை மட்டும்தான் இருக்கிறது,' என்று கூறினார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
ஆனால் டிரைவரின் விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. ''டிரைவர் 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் என்றும், விபத்து நடந்த நேரத்தில் அவருக்குக் காப்பீடு இல்லை என்றும் மட்டுமே தனக்குத் தெரிவிக்கப்பட்டதாக, ஆர்த்தி தந்தை சுமிரன் சிங் கூறினார்.
வடக்கு கலிபோர்னியாவில் செயல்படும் ஒரு சமூகக் குழு, இந்த விபத்து குறித்து அறிந்து உடனடியாக அவருக்கு உதவி செய்ய முன்வந்தது. ஆர்த்தி தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் இருப்பதால், தன்னார்வலர்களால் நடத்தப்படும் கலாசார மற்றும் பிராந்தியக் குழுக்கள் உட்பட சமூக அமைப்புகள் உதவி செய்து வருகின்றன.
ஆர்த்தியின் தந்தை கண்ணீருடன் அவரது படுக்கையருகே காத்திருந்து, அவரிடம், 'எழுந்திரு, செல்லமே. நான் இங்கேயே இருக்கிறேன்,' என்று கண்ணீர் பொங்க கூறிய சம்பவம் கண்கலங்க வைத்தது.

