இந்திய உறவு விரிசலுக்கு அமெரிக்க கொள்கை தான் காரணம்; பார்லி உறுப்பினர் விமர்சனம்
இந்திய உறவு விரிசலுக்கு அமெரிக்க கொள்கை தான் காரணம்; பார்லி உறுப்பினர் விமர்சனம்
ADDED : டிச 11, 2025 08:54 AM

வாஷிங்டன்: அமெரிக்காவின் சொந்தக் கொள்கையினால் இந்தியா - ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான உறவு வலுப்பெறுவதாக அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் சிட்னி காம்லாகர் டவ் தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் புடின் டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் இருநாள் பயணமாக இந்தியா வந்திருந்தார். அமெரிக்காவுடன் வரி விதிப்பில் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், அதிபர் புடின் - பிரதமர் மோடியின் சந்திப்பு உலக அரங்கில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. இது அமெரிக்காவுக்கு கவலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வரிவிதிப்பு கொள்கையால் இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், இந்தியா - ரஷ்யா இடையிலான உறவு வலுப்பெற்று வருவதாக, அமெரிக்க பார்லி உறுப்பினர், அதிபர் டிரம்ப்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். வெளியுறவுக் கொள்கை தொடர்பான பார்லி விவாதத்தில் கலிபோர்னியாவை சேர்ந்த ஜனநாயக கட்சி எம்.பி., சிட்னி காம்லாகர் டவ் பேசியதாவது; பிரதமர் மோடியும், அதிபர் புடினும் ஒரே காரில் பயணிக்கும் இந்தப் புகைப்படம், இரு தலைவர்களிடையேயான ஆழமான நட்புறவை வெளிப்படுத்துகிறது. இது இந்தியாவை நம்பிக்கைக்குரிய ராஜதந்திர கூட்டாளியாக நடத்துவதில், அமெரிக்கா தோல்வியடைந்ததற்கான அடையாளமாக மாறியுள்ளது. அமெரிக்காவின் கொள்கைகளே இந்தியா மற்றும் ரஷ்யாவின் உறவுகளை மிகவும் நெருக்கமாக்குகின்றன.
இந்தியாவுக்கு எதிரான அமெரிக்காவின் அணுகுமுறை, நமது மூக்கை நாமே அறுப்பது போன்ற செயலாகும். (புடின் - பிரதமர் மோடியின் போட்டோவை காண்பித்து) இது ஆயிரம் வார்த்தைகளுக்கு மதிப்புமிக்கது. வெள்ளை மாளிகையின் செயல்பாடுகள், பல ஆண்டுகளாக இந்தியா - அமெரிக்கா இடையே நிலவி வந்த உறவை சேதப்படுத்தி வருகின்றன. அமெரிக்க ராஜதந்திர கூட்டாளிகளை நமது எதிரிகளின் கைகளுக்கு தள்ளி விட்டுவிட்டு, உங்களால் நோபல் பரிசு வாங்க முடியாது. இந்தியாவுடனான உறவை சரி செய்யத் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.

