UPDATED : மே 11, 2024 02:58 PM
ADDED : மே 11, 2024 02:52 PM

மும்பை: 'பா.ஜ., வின் அரசியல் வேறு. மக்கள் கலாசாரத்தை பா.ஜ., புரிந்து கொள்ளவில்லை' என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கூறினார்.
மஹாராஷ்டிரா மாநிலம் நந்தூர்பாரில் நடந்த நிகழ்ச்சியில் பிரியங்கா பேசியதாவது: காங்கிரஸ் கட்சியின் அரசியல் பாரம்பரியத்தின் அடித்தளம் மகாத்மா காந்தியால் போடப்பட்டது. அவர் எப்போதும் உண்மையை பேசினார். ஜனநாயகத்தில் மக்களே உயர்ந்தவர்கள் என்று கூறினார். பா.ஜ., வின் அரசியல் வேறு. மக்கள் கலாசாரத்தை பா.ஜ., புரிந்து கொள்ளவில்லை.
பழங்குடியினர்
நாட்டில் பழங்குடியினர் மீது தாக்குதல் நடக்கும் போதெல்லாம், பிரதமர் மோடி முதல் பெரிய தலைவர்கள் வரை அனைவரும் அமைதியாக இருக்கிறார்கள். அவர்கள் பழங்குடியினர் நிலத்தை பெரிய தொழிலதிபர்களுக்கு கொடுக்கிறார்கள். நாட்டின் ஒரே பழங்குடியின முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் தேர்தல் நேரத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
நடைபயணம்
காங்கிரஸ் எம்.பி ராகுல் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 4,000 கிலோமீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்டார். மக்களின் பிரச்னைகளை கேட்டறிந்தார். மக்களின் பிரச்னைகளைப் புரிந்து கொள்ள நடைபயணம் செல்லும் எந்தத் தலைவர்களும் நம் நாட்டில் இருக்க மாட்டார்கள்.
பொய்
பிரதமர் மோடி என்ன சொன்னாலும் அது பொய். அவர் எது சொன்னாலும் அது தேர்தலுக்காக மட்டுமே. ஊழலுக்காகத் தனியாகப் போராடுவதாகக் கூறுகிறார். அவர் இந்திராவிடம் இருந்து உறுதியையும் துணிச்சலையும் கற்றுக்கொள்ள வேண்டும். அவரை (இந்திரா) நீங்கள் தேசவிரோதி என்று அழைப்பதால் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள முடியாது.இவ்வாறு அவர் பேசினார்.