வங்கதேசத்தில் 2026 பிப்ரவரியில் பொதுத்தேர்தல்; முகமது யூனுஸ் அறிவிப்பு
வங்கதேசத்தில் 2026 பிப்ரவரியில் பொதுத்தேர்தல்; முகமது யூனுஸ் அறிவிப்பு
ADDED : ஆக 05, 2025 10:07 PM

டாக்கா: 'வங்கதேசத்தில் 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பொதுத்தேர்தல் நடைபெறும்” என அந்நாட்டின் இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் அறிவித்து உள்ளார்.
வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் போராட்டத்தால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, முகமது யூனுஸ் தலைமையில், வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி நீக்கம் செய்த எழுச்சியின் முதலாமாண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், அரசு தொலைக்காட்சி வாயிலாக இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் பேசியதாவது:
வங்கதேசத்தில் 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பொதுத்தேர்தல் நடைபெறும். இடைக்கால அரசாங்கத்தின் சார்பாக, பொதுத் தேர்தலை நடத்துமாறு தேர்தல் கமிஷன், தலைமைத் தேர்தல் ஆணையருக்கு நான் கடிதம் எழுதுவேன்.
இந்த ஆண்டு தேர்தல் நாட்டின் வரலாற்றில் மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டம், அமைதி மற்றும் நல்லுறவு ஆகியவற்றின் அடிப்படையில் மறக்க முடியாததாக இருக்கும்.அனைத்து ஏற்பாடுகளையும் முடிக்க நாளை முதல் ஏற்பாடுகளைத் தொடங்குவோம்.
அரசியல் கட்சிகளுக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால், உங்கள் தேர்தல் அறிக்கைகளிலும், உங்கள் வாக்குறுதிகள் மற்றும் திட்டங்களிலும், இளைஞர்களை விட்டுவிடக்கூடாது.
பெண்களை விட்டுவிடக்கூடாது. நினைவில் கொள்ளுங்கள், வங்கதேசத்தில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்த இளைஞர்களுக்கு உலகையும் மாற்றும் சக்தி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.