17 புதிய எம்.எல்.சி.,க்கள் பதவியேற்பு முதல்வரிடம் பா.ஜ.,வின் ரவி ஆசி
17 புதிய எம்.எல்.சி.,க்கள் பதவியேற்பு முதல்வரிடம் பா.ஜ.,வின் ரவி ஆசி
ADDED : ஜூன் 25, 2024 04:52 AM

பெங்களூரு, : கர்நாடகா மேலவையில் புதிய எம்.எல்.சி.,கள் பதவியேற்றுக் கொண்டனர். எம்.எல்.சி.,யாக பதவியேற்ற பின், முதல்வர் சித்தராமையாவின் காலில் விழுந்து, சி.டி.ரவி ஆசி பெற்றார்.
பட்டதாரி, ஆசிரியர்
கர்நாடகா மேலவையில் காலியான எம்.எல்.சி.,க்கள் பதவிகளுக்கு, எம்.எல்.ஏ.,க்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரசின் யதீந்திரா, அமைச்சர் போசராஜு, கோவிந்த ராஜு, வசந்த் குமார், ஐவான் டிசோசா, பல்கிஸ் பானு, ஜக்தேவ் குட்டேதார்; பா.ஜ.,வின் சி.டி.ரவி, ரவிகுமார், முலே; ம.ஜ.த.,வின் ஜவராய் கவுடா ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
மூன்று பட்டதாரி, மூன்று ஆசிரியர் தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், வடகிழக்கு பட்டதாரி தொகுதியில் காங்கிரசின் சந்திரசேகர பாட்டீல்; பெங்களூரு பட்டதாரி தொகுதியில் காங்கிரசின் ராமோஜி கவுடா, தென் கிழக்கு ஆசிரியர் தொகுதியில் காங்கிரசின் சீனிவாஸ், தென்மேற்கு பட்டதாரி தொகுதியில் பா.ஜ.,வின் தனஞ்செய் சர்ஜி; ம.ஜ.த.,வில் தென்மேற்கு ஆசிரியர் தொகுதியில் போஜே கவுடா, தெற்கு ஆசிரியர் தொகுதியில் விவேகானந்தா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
முதல்வரிடம் ஆசி
இவர்கள் 17 பேருக்கும் பெங்களூரு விதான் சவுதாவின் மாநாட்டு அரங்கில், மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, முதல்வர் சித்தராமையா முன்னிலையில் பதவியேற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
எம்.எல்.சி.,யாக பதவியேற்றுக் கொண்ட சி.டி.ரவி, நேராக முதல்வர் சித்தராமையாவின் காலை தொட்டு வணங்கி ஆசி பெற்றார்.
அப்போது முதல்வர், ரவியின் தோளில் தட்டி வாழ்த்துத் தெரிவித்தார். மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, ரகசிய காப்பு பிரமாணம் அடங்கிய சூட்கேசை வழங்கினார்.
அப்போது முதல்வரிடம், மேலவை தலைவர் ஏதோ சொல்ல, அதற்கு அவர் சி.டி.ரவியின் காதை பிடித்து இழுத்து புன்னகைத்தார்.
முதல்வர் சித்தராமையாவை அதிகம் விமர்சிக்கும் நபர்களில், சி.டி.ரவியும் ஒருவர்.
ஆனாலும், பதவி பிரமாணம் எடுத்துக் கொண்ட பின், சித்தராமையாவிடம் ஆசி பெற்றதில் இருந்து, இருவரும் கொள்கைரீதியாக எதிராக இருந்தாலும், நட்புடன் உள்ளதை உணர்த்தியது.