ஏர்போர்ட்டில் வெடிகுண்டு மிரட்டல் அமைச்சர் மூன்று மணி நேரம் தவிப்பு
ஏர்போர்ட்டில் வெடிகுண்டு மிரட்டல் அமைச்சர் மூன்று மணி நேரம் தவிப்பு
ADDED : ஜூன் 25, 2024 04:55 AM

கலபுரகி : கலபுரகி விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக, விமான நிலைய அலுவலக இ - மெயிலுக்கு வந்த மிரட்டலால், மூன்று மணி நேரம் விமான நிலையம் முழுதும் சோதனை நடத்தப்பட்டது. முடிவில் புரளி என தெரிய வந்தது.
சோதனை
கலபுரகி விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக, விமான நிலைய இயக்குனர் சிலகா மகேசுக்கு, நேற்று காலை 7:00 மணியளவில், இ - மெயிலில் மிரட்டல் கடிதம் வந்தது.
உடனடியாக போலீசாருக்கும், வெடிகுண்டு செயலிழப்பு படையினருக்கும் அவர் தகவல் தெரிவித்தார். மோப்ப நாயுடன் அதிகாரிகள் அங்கு வந்தனர். விமான நிலையத்திலும், பயணியரின் உடமைகளை தீவிர சோதனை செய்தனர்.
அதேநேரத்தில், பெங்களூரில் இருந்து கலபுரகிக்கு வருவாய் துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா விமானத்தில் வருகை தந்தார். பாதுகாப்பு கருதி, விமானத்தில் இருந்து அவர் உட்பட யாரையும் கீழே இறங்க அனுமதி அளிக்கவில்லை.
மூன்று மணி நேரம் நடந்த சோதனைக்கு பின், புரளி என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். அதேநேரத்தில், இ - மெயில் அனுப்பியவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
தாமதம்
விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா கூறுகையில், ''வெடிகுண்டு மிரட்டலால், பயணியருடன் என்னையும் அரைமணி நேரம் தாமதமாக வெளியே செல்ல பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதித்தனர். இதுபோன்ற அழைப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. யாரும் அச்சப்பட தேவையில்லை,'' என்றார்.
கர்நாடகா உட்பட நாடு முழுதும் பல விமான நிலையங்களுக்கு இதுபோன்று வெடிகுண்டு மிரட்டல் வருவது குறிப்பிடத்தக்கது.