பி.ஓ.பி., சிலைகளை என்ன செய்வது? மாசு கட்டுப்பாட்டு வாரியம் குழப்பம்!
பி.ஓ.பி., சிலைகளை என்ன செய்வது? மாசு கட்டுப்பாட்டு வாரியம் குழப்பம்!
ADDED : ஆக 29, 2024 03:00 AM
பெங்களூரு : பறிமுதல் செய்யப்படும் ஆயிரக்கணக்கான பி.ஓ.பி., எனும், 'பிளாஸ்டர் ஆப் பாரிஸ்' விநாயகர் சிலைகளை என்ன செய்வது என தெரியாமல் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் குழப்பம் அடைந்துள்ளது.
செப்டம்பர் 7ல், விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டத்திற்காக சுற்றுச்சூழலுக்கு ஆபத்தான பி.ஓ.பி., சிலைகளை பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது.
பி.ஓ.பி.,யில் விநாயகர் சிலைகள் தயாரிப்பது, சேகரித்து வைப்பது, விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, இதர சிலைகளின் உயரமும் 3 அடிக்கும் அதிகமாக இருக்கக் கூடாது எனவும், அறிவுறுத்தியுள்ளது. ஆனால் இதை மீறி பி.ஓ.பி., சிலைகள் தயாரிப்பதும், விற்பதும் குறையவில்லை.
இத்தகைய சிலைகளை பார்த்தால், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், பறிமுதல் செய்கின்றனர். பண்டிகைக்கு இன்னும் சில நாட்கள் இருப்பதால், மாநிலம் முழுதும் பல்வேறு இடங்களில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் 5,000 பி.ஓ.பி., சிலைகளை பறிமுதல் செய்துள்ளன.
இதுகுறித்து, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
சுற்றுச்சூழலுக்கு அபாயத்தை ஏற்படுத்தும், பி.ஓ.பி., சிலைகளை அழிக்க வேண்டும் என, 2023ல் கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், அவற்றை எப்படி அழிக்க வேண்டும் என்பது, எங்களுக்கு தெரியவில்லை. கடவுள் சிலை என்பதால், இது உணர்வுப்பூர்வமான விஷயம்.
நாங்கள் பறிமுதல் செய்த சிலைகளை, வெவ்வேறு இடங்களில் பாதுகாப்பாக வைத்துள்ளோம். இதை என்ன செய்வது, எப்படி அழிப்பது என்பது பற்றி எந்த அதிகாரிகளும் தெளிவுபடுத்தவில்லை. சிலைகளை கரைப்பது தொடர்பான விஷயம், எந்த துறை சம்பந்தப்பட்டது என்றும் தெரியவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

