பாலினம் மாறுவதற்கு கோரிக்கை: எல்லை படை நிராகரித்தது
பாலினம் மாறுவதற்கு கோரிக்கை: எல்லை படை நிராகரித்தது
UPDATED : பிப் 27, 2025 04:31 AM
ADDED : பிப் 27, 2025 01:26 AM

புதுடில்லி: பாலினத்தை மாற்றக் கோரி பெண் ஒருவர் விடுத்த கோரிக்கையை, ஐ.டி.பி.பி., எனப்படும் இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்புப் படை நிராகரித்துள்ளது.
இது தொடர்பான கோரிக்கைகள் வந்தால் நிராகரிக்கும்படி, படையின் அனைத்து பிரிவுகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்புப் படை உயரதிகாரிகள் கூறியதாவது:
படையில் பணியாற்றும் பெண் ஒருவர், தன் பாலினத்தை மாற்றிக் கொள்வதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஐ.டி.பி.பி., சட்டம் மற்றும் மத்திய பணி விதிகளில் இது தொடர்பாக எதுவும் கூறப்படவில்லை. இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கருத்து கோரப்பட்டது.
மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சி துறையுடன் ஆலோசித்த மத்திய உள்துறை அமைச்சகம், பாலினத்தை மாற்றிக் கொள்வதை அனுமதிப்பது தொடர்பாக எந்தக் கொள்கையும் இல்லை என்று கூறியுள்ளது.
மேலும், சி.ஏ.பி.எப்., எனப்படும் மத்திய ஆயுத போலீஸ் படைகளின் மருத்துவ இயக்குநரகத்தின் கருத்தை கோரும்படி கூறியது. இதன்படி ஆய்வு செய்த மருத்துவ இயக்குநரகம், பாலினத்தை மாற்றிக் கொள்வதற்கு அனுமதி வழங்க முடியாது என்று கூறியுள்ளது.
மத்திய ஆயுத போலீஸ் படைகளின் விதிகளின்படி, படையில் ஆண் அல்லது பெண் என்று இரு பாலினங்கள் மட்டுமே இருக்க முடியும்.
படையில் உள்ள ஒருவர் தன் பாலினத்தை மாற்றிக்கொள்ள அனுமதித்தால், அது ஒட்டுமொத்தமாக குழப்பத்தையும், தவறான விளைவுகளையும் ஏற்படுத்தி விடும். மன ரீதியிலான பிரச்னைகளையும் உருவாக்கி விடும்.
இதைத்தவிர, படையில் உள்ள ஆண்களுக்கு என சில உடற்தகுதிகளும், பெண்களுக்கு என, தனியாக உடற்தகுதி விதிகளும் உள்ளன. அந்த அடிப்படையிலும், இந்த கோரிக்கையை ஏற்க முடியாது என, மருத்துவ இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
அதன்படியே, இதுபோன்ற கோரிக்கை வந்தால் அதை நிராகரிக்கும்படி, படையின் அனைத்து பிரிவுகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சில ஆண்டுகளுக்கு முன், சி.ஐ.எஸ்.எப்., எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒரு வீரர், பெண்ணாக மாறினார். ஆனாலும், அவர் ஆணாகவே கருதப்படுவார் என, பாலின மாற்றத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.