ADDED : செப் 06, 2024 01:53 AM
ஷிவமொகா,பெற்றோரின் அலட்சியத்தால், ஒன்றரை வயது ஆண் குழந்தை பாட்டில் மூடியை விழுங்கி உயிரிழந்தது.
கர்நாடகாவின் ஷிவமொகா மாவட்டம், ஷிகாரிபுராவின் ஹரகுவள்ளி கிராமத்தில் வசிப்பவர் வேதமூர்த்தி கங்காதரய்யா சாஸ்திரி. இவருக்கு ஒன்றரை வயதில் நந்தீஷ் என்ற ஆண் குழந்தை இருந்தது. இந்த குழந்தை நேற்று முன்தினம் ஜூஸ் பாட்டிலை வைத்துக் கொண்டு விளையாடியது. அப்போது பாட்டிலின் மூடியை வாயில் போட்டு விழுங்கியது. இதை பெற்றோர் கவனிக்கவில்லை.
தொண்டையில் மூடி சிக்கியதால் மூச்சு விட முடியாமல் திணறியது. அப்போது தான் பெற்றோருக்கு விபரீதம் தெரிந்தது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.
'இந்த அசம்பாவிதத்துக்கு பெற்றோரின் கவனக்குறைவே காரணம். குழந்தைகள் வாயில் போடக்கூடிய சிறிய பொருட்கள், அவர்களின் கைக்கு எட்டும்படி வைக்கக் கூடாது. அவர்கள் விளையாடும்போது, பெற்றோர் கண்காணிக்க வேண்டும். நந்தீஷின் பெற்றோர் கவனித்திருந்தால், அசம்பாவிதம் ஏற்பட்டிருக்காது' என, டாக்டர்கள் தெரிவித்தனர்.