நர்ஸ் கொலை வழக்கில் காதலன் கைது; உடலை அடக்கம் செய்த போலீஸ் மீது கோபம்
நர்ஸ் கொலை வழக்கில் காதலன் கைது; உடலை அடக்கம் செய்த போலீஸ் மீது கோபம்
ADDED : மார் 15, 2025 01:38 AM

ஹாவேரி : கழுத்தை நெரித்து கொன்று, துங்கபத்ரா ஆற்றில் நர்ஸ் உடலை வீசிய வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் இருவரை போலீசார் தேடுகின்றனர்.
ஹாவேரி ராட்டிஹள்ளி மசூரு கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் ஸ்வாதி, 22. ராணிபென்னுாரில் தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை செய்தார். கடந்த மாதம் 3ம் தேதி காலையில் வேலைக்கு சென்றவர், பின் வீடு திரும்பவில்லை. அவரது மொபைல் போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது.
அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மருத்துவமனைக்கு சென்று விசாரித்தபோது, பணியை முடித்துவிட்டுச் சென்றது தெரிந்தது. உறவினர்கள், தோழிகள் வீட்டிற்கு சென்று விசாரித்தும், ஸ்வாதியை பற்றி எந்த தகவலும் இல்லை.
உடல் மீட்பு
இதற்கிடையில் கடந்த 6ம் தேதி ராணிபென்னுார் அருகே பட்டேபுரா கிராமத்தில், துங்கபத்ரா ஆற்றில் ஒரு இளம்பெண் உடல் மிதந்தது.
ஹலகேரி போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த இளம்பெண்ணை பற்றிய விபரம் தெரியவில்லை.
ஹாவேரி மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களிலும், இளம்பெண் மாயமானது குறித்து, எந்த புகாரும் பதிவாகவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கையில், இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிந்தது. இதன்பின், அனாதை பிணம் என்று கருதி, இளம்பெண் உடலை போலீசார் அடக்கம் செய்தனர்.
லவ் ஜிகாத்
இதற்கிடையில், மகள் மாயமானதாக ஸ்வாதியின் தந்தை ரமேஷ், கடந்த 7ம் தேதி, ராட்டிஹள்ளி போலீசில் புகார் செய்தார். இதையறிந்த ஹலகேரி போலீசார், தாங்கள் அடக்கம் செய்த இளம்பெண்ணின் அடையாளம் பற்றி கூறினர். இதன்மூலம் போலீசார் அடக்கம் செய்தது, ஸ்வாதியின் உடல் என்று தெரிந்தது.
ஹலகேரி போலீசாரின் விசாரணையில், ஸ்வாதி கொலையில் ராணிபென்னுாரின் நயாஸ், 25, அவரது நண்பர்கள் விநாயக், 25, துர்காச்சாரி, 26, ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது.
நயாஸ் நேற்று கைது செய்யப்பட்டார். மற்ற இருவரை போலீசார் தேடுகின்றனர். 'லவ் ஜிகாத்' என்னும் ஹிந்து பெண்களை மதம் மாற்றி திருமணம் செய்யும் நடைமுறைக்கு, ஸ்வாதி மறுத்ததால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என, ஹிந்து அமைப்புகள் குற்றம் சாட்டி உள்ளன. ஸ்வாதியின் உடலை அவசரப்பட்டு அடக்கம் செய்ததாக, போலீசார் மீதும் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.