ADDED : ஆக 06, 2024 02:45 AM
திருவனந்தபுரம், கேரளாவில் மூளையை தின்னும் 'அமீபா' தொற்றுக்கு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் மூன்று பேர் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகவும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
கேரளாவில், 'அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ்' என்ற நோய் பரவி வருகிறது. இது மூளையை தின்னும் அமீபா என அழைக்கப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும் இந்த நோயால் நான்கு குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். இதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இதுவரை குழந்தைகளை மட்டுமே பாதித்து வந்த இவ்வகை தொற்றுக்கு, முதல் முறையாக திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'திருவனந்தபுரத்தில் இளைஞர் ஒருவர் இந்த வகை தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்ததை உறுதி செய்துள்ளோம்.
'இதுதவிர, அதே பகுதியைச் சேர்ந்த மேலும் மூன்று இளைஞர்களும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், அனைவரும் அங்குள்ள அசுத்தமான குளத்தில் ஒன்றாக குளித்ததே இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.
'பாதிக்கப்பட்டவர்களுக்கு திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது' என, குறிப்பிடப்பட்டுள்ளது.