தேசிய களரிபயட்டு சாம்பியன்ஷிப் பெங்களூரின் தாத்ரிக்கு வெண்கலம்
தேசிய களரிபயட்டு சாம்பியன்ஷிப் பெங்களூரின் தாத்ரிக்கு வெண்கலம்
ADDED : செப் 06, 2024 05:56 AM

கேரளாவில் நடந்த, 16வது தேசிய களரிபயட்டு சாம்பியன்ஷிப் போட்டியில், பெங்களூரை சேர்ந்த தாத்ரி வெண்கலப் பதக்கம் வென்றார்.
களரிபயட்டு என்பது கேரளாவின் பழங்கால வீர விளையாட்டு. மன்னர் ஆட்சிக் காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்தது. தற்போதும் அங்குள்ள இளைஞர்கள் களரிபயட்டு கற்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
வீர விளையாட்டுகள் அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்பதால், பல்வேறு பகுதிகளில் நடக்கும் அரசு, தனியார் நிகழ்ச்சிகளில் இடம்பெறுகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக பெங்களூரில் நடந்த சுதந்திர தின விழாவிலும், ராணுவ வீரர்கள், களரிபயட்டு வீர விளையாட்டு இடம்பெற்றது. மேலும், மாநில, தேசிய அளவிலும் அவ்வப்போது போட்டிகள் நடத்தப்படுகின்றன.
அந்த வகையில், 16வது தேசிய களரிபயட்டு சாம்பியன்ஷிப் போட்டிகள், கேரளாவின் திருவனந்தபுரத்தில் சமீபத்தில் நடந்தது.
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம், இந்திய களரிபயட்டு கூட்டமைப்பு இணைந்து இந்த போட்டிகள் நடத்தின.
வெவ்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், மகளிர் ஜூனியர் பிரிவில், பெங்களூரை சேர்ந்த தாத்ரி சிறப்பான முறையில் தன் திறமையை வெளிப்படுத்தினார்.
இறுதியில், வெண்கலப் பதக்கம் வென்றார். அடுத்த முறை கண்டிப்பாக தங்கப்பதக்கம் வெல்வேன் என, அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்
. - நமது நிருபர் -