டிரம்ப் பெயரில் இருப்பிட சான்றிதழுக்கு விண்ணப்பம்: கொடுத்தவரை தேடுகிறது போலீஸ்!
டிரம்ப் பெயரில் இருப்பிட சான்றிதழுக்கு விண்ணப்பம்: கொடுத்தவரை தேடுகிறது போலீஸ்!
ADDED : ஆக 06, 2025 07:31 AM

பாட்னா: பீஹாரில் இருப்பிட சான்றிதழ் கோரி அமெரிக்க அதிபர் டிரம்ப் பெயரில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ள விவரம் வெளியாகி இருக்கிறது.
விரைவில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் பீஹாரில் போலியான, இடம்பெயர்ந்த மற்றும் உயிரிழந்த வாக்காளர்களை நீக்கிவிட்டு, புதிய மற்றும் முழுமையான வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் பணியில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
அதற்காக சிறப்பு தீவிரத்திருத்தம் என்ற பெயரில் நடவடிக்கை எடுத்த தேர்தல் ஆணையம், வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. அதில் 65 லட்சம் வாக்காளர் நீக்கப்பட்டு இருக்க, இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
வாக்காளர்கள் பட்டியலில் பெயர் இணைக்க, 11 ஆவணங்கள் மட்டுமே தகுதியானவை என்று அறிவித்து இருந்த தேர்தல் ஆணையம் அவற்றில் இருப்பிடச் சான்றிதழும் அடக்கம் என்றும் கூறி இருந்தது.
இந் நிலையில், பீஹாரில் இருப்பிடச் சான்றிதழ் கேட்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் பெயரில் விண்ணப்பம் அளிக்கப்பட்டு உள்ள விவரம் தற்போது வெளியாகி உள்ளது.
சமஸ்திபுர் மாவட்டம், மொஹியுதீன்நகர் மண்டலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர், டிரம்ப் புகைப்படத்தை பயன்படுத்தி, ஆன்லைனில் இருப்பிட சான்றிதழ் கோரும் விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளார். அந்த விண்ணப்பத்தில் ஹசன்பூர் கிராமம், வார்டு எண் 13, பக்கர்பூர் காவல் நிலையம், மொஹியுதீன்நகர் மண்டலம்,சமஸ்திபுர் மாவட்டம் என்று தெளிவாக முகவரி இடம்பெற்றுள்ளது.
ஜூலை 29ம் தேதி அன்று இந்த விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. அதில் விண்ணப்பத்தின் எண் BRCCO/2025/17989735 எனவும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
விண்ணப்பத்தை அதிகாரிகள் சரிபார்த்த போது, படிவத்தில் புகைப்படம், ஆதார் எண், பார்கோடு மற்றும் முகவரி உள்ளிட்ட விவரங்கள் முறைகேடாக பயன்படுத்தி இருப்பதை கண்டறிந்தனர்.
அரசு நிர்வாகத்தின் நம்பிக்கையையும், நேர்மையையும் சிதைக்கும் வண்ணம், திட்டமிட்டு இந்த விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாக கூறியுள்ள அதிகாரிகள், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க புகார் அளித்துள்ளதாக விளக்கம் அளித்து உள்ளனர்.
சம்பந்தப்பட்டவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் கூறி உள்ளனர். இதையடுத்து, களத்தில் இறங்கி உள்ள சைபர் கிரைம் போலீசார், டிரம்ப் பெயரில் விண்ணப்பம் அளித்த குசும்பான நபர் யார் என்ற விசாரணையை தொடங்கி இருக்கின்றனர்.