ADDED : பிப் 22, 2025 09:38 PM
விக்ரம்நகர்:பெண்களுக்கு மாதந்தோறும் 2,500 ரூபாய் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது, பட்ஜெட் தாக்கல் ஆகியவை குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ரேகா குப்தா நேற்று ஆலோசனை நடத்தினார்.
பெண்களுக்கு மாதந்தோறும் 2,500 ரூபாய் வழங்கும் திட்டத்தை முதல் அமைச்சரவை கூட்டத்தில் செயல்படுத்தாதது குறித்து, ஆளும் பா.ஜ., அரசை எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி கடுமையாக விமர்சித்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று அதிகாரிகளுடன் நடத்திய பட்ஜெட் ஆலோசனை கூட்டத்தில் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து முதல்வர் ரேகா குப்தா விவாதித்தார்.
இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள், தகுதி அளவுகோல் உள்ளிட்ட வழிகாட்டுதல்களை வகுக்க அதிகாரிகளுக்கு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
மேலும் பிற மாநில அரசுகளால் துவங்கப்பட்ட இதேபோன்ற திட்டங்களை ஒப்பீட்டு, வழிகாட்டு நெறிமுறையை வகுக்கும்படி உத்தரவிடப்பட்டதாக மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தக் கூட்டத்தில், மாநில அரசின் பட்ஜெட் குறித்த கண்ணோட்டம், முதல்வருக்கு வழங்கப்பட்டது. மக்களுக்கு அதிகபட்ச நன்மை பயக்கும் வகையில் பணத்தை திறமையாக செலவிடும்படியான திட்டத்தை வகுக்கும்படி அதிகாரிகளை முதல்வர் கேட்டுக் கொண்டார்.
மொஹல்லா கிளினிக்
மாநில சுகாதாரத் துறை
அமைச்சர் பங்கஜ் சிங், எம்.பி., கமல்ஜீத் செராவத்துடன் இணைந்து, ராவ் துலா
ராம் நினைவு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வுக்குப்பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் பங்கஜ் சிங் கூறியதாவது:
மொஹல்லா
மருத்துவமனைகளின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக
அவற்றின் நிலைமைகள் குறித்த விரிவான அறிக்கை விரைவில் வெளியிடப்படும்.
அறிக்கை
கிடைத்ததும், மருத்துவமனைகள் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் நான்
பதிலளிப்பேன். அதிகாரப்பூர்வ ஆவணங்கள் இல்லாமல், நான் எந்தக்
கூற்றுக்களையும் கூற முடியாது.
இந்த அறிக்கை இந்த மருத்துவமனைகளின்
உண்மையான நிலையை வெளிப்படுத்தும் மற்றும் அவற்றின் செயல்பாட்டில் ஏதேனும்
முறைகேடுகளைக் கண்டறியும்.
இவ்வாறு அவர் கூறினார்.