UPDATED : செப் 04, 2024 03:19 AM
ADDED : செப் 04, 2024 03:14 AM

பரிதாபாத்: ஹரியானாவில் பசுவை கடத்திச் சென்றதாக புரளி கிளம்பியதை அடுத்து, பள்ளி மாணவரை 25 கி.மீ., துாரம் காரில் துரத்திச் சென்று, பசு பாதுகாவலர்கள் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஹரியானா மாநிலத்தின் பரிதாபாதைச் சேர்ந்தவர் ஆரியன் மிஸ்ரா, 19. பிளஸ் 2 படித்து வந்த இவர், தன் நண்பர்களுடன் உணவு சாப்பிட, கடந்த மாதம் 23ம் தேதி இரவு காரில் சென்றார். ஆரியனுடன், ஹர்ஷத், ஷங்கே மற்றும் இரண்டு இளம் பெண்கள் காரில் சென்றனர்.
இதற்கிடையே, பரிதாபாத் அருகே காரில் பசு மாடுகள் கடத்தப்படுவதாக, பசு பாதுகாப்பு கும்பலுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, டில்லி - ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் கார்களை அக்கும்பல் கண்காணித்தது. அப்போது, அவ்வழியாக சென்ற ஆரியனின் காரில் பசு கடத்தப்படுவதாக எண்ணி, அக்கும்பல் துரத்திச் சென்றது.
![]() |
ஆரியனின் நண்பர் ஹர்ஷத் காரை ஓட்டியபோது, ஒரு கும்பல் தங்களை பின்தொடர்ந்து வருவதை அறிந்து வாகனத்தை வேகமாக இயக்கினார். 25 கி.மீ., துாரம் சென்ற நிலையில், அங்குள்ள சுங்கச்சாவடியை கடந்தபோது, பசு பாதுகாப்பு கும்பல், மாணவரின் கார் பின்பக்க கண்ணாடியை நோக்கி துப்பாக்கியால் சுட்டது. அப்போது, பின் இருக்கையில் இருந்த ஆரியன் மீது குண்டு பாய்ந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஹர்ஷத், உடனே காரை நிறுத்தினார். பின்தொடர்ந்து வந்த பசு பாதுகாப்பு கும்பல், அவர்களின் காரை சோதனையிட்டதில் பசு கடத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ததுடன், ஆரியன் மீது மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பியோடியது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவன் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய அனில் கவுசிக், வருண், கிருஷ்ணா, அதேஷ், சவுரவ் ஆகிய ஐந்து பேரையும் கைது செய்தனர்.