புதிய வழித்தடங்களில் பஸ் கே.எஸ்.ஆர்.டி.சி., திட்டம்
புதிய வழித்தடங்களில் பஸ் கே.எஸ்.ஆர்.டி.சி., திட்டம்
ADDED : ஆக 18, 2024 11:26 PM

பெங்களூரு : 'சக்தி' திட்டத்துக்கு பின், அரசு பஸ்களில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. பயணியர் வசதிக்காக புதிய வழித்தடங்களில் பஸ்கள் இயக்க, கே.எஸ்.ஆர்.டி.சி., திட்டமிட்டுள்ளது.
கே.எஸ்.ஆர்.டி.சி., வெளியிட்ட அறிக்கை:
கர்நாடகாவில், அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்க அனுமதி அளிக்கும், 'சக்தி' திட்டம் செயல்படுத்தப்பட்ட பின், கே.எஸ். ஆர்.டி.சி., பஸ்களில் பயணிப்போர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ஒவ்வொரு வழித்தடத்திலும், பயணியர் நெருக்கடி ஏற்படுகிறது.
பஸ்கள் கிடைக்காமல் பயணியர் அவதிப்படுகின்றனர். எனவே, பயணியர் நெருக்கடி அதிகம் உள்ள, 259க்கும் அதிகமான புதிய வழித்தடங்களில் பஸ்கள் இயக்க, கே.எஸ்.ஆர்.டி.சி., திட்டமிட்டுள்ளது.
மாநிலத்தில் கொரோனா பரவிய போது, மாதக்கணக்கில் ஊரடங்கு அமலில் இருந்தது.
பல்வேறு வழித்தடங்களில், பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதுவரை இந்த வழித்தடங்களில் பஸ் போக்குவரத்து துவங்கவில்லை. இதனால் பயணியர் பாதிப்படைகின்றனர். இதை மனதில் கொண்டு, இந்த வழித்தடங்களில் மீண்டும் பஸ் போக்குவரத்தை துவக்க தயாராகிறோம்.
பயணியரின் வேண்டுகோளுக்கு இணங்கி, தேவையான வழித்தடங்களில் பஸ்கள் இயக்க, நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.