நான்கரை ஆண்டுகளை வீணடித்த தி.மு.க., அரசு: பா.ஜ., குற்றச்சாட்டு
நான்கரை ஆண்டுகளை வீணடித்த தி.மு.க., அரசு: பா.ஜ., குற்றச்சாட்டு
ADDED : நவ 23, 2025 02:38 AM

திருச்சி: ''தன்னை, காவிரி டெல்டாக்காரன் என கூறிக்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின், விவசாயிகளை வஞ்சிக்கிறார்,” என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
திருச்சி பா.ஜ., அலுவலகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேசிய பொதுச்செயலர் தருண் சுக், மாநில பொறுப்பாளர் அரவிந்த் மேனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின், நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி:
மத்திய அரசு எதைக் கொண்டு வந்தாலும், அதை எதிர்ப்பதற்காக, நான்கரை ஆண்டுகளை, தி.மு.க., அரசு வீணடித்து விட்டது. மக்களுக்கு தேவையான எதையும் செய்யவில்லை;
கஞ்சா, போதை பொருட்களை ஒழிக்கவில்லை; சொத்து வரி, மின் கட்டண உயர்வு பற்றி கண்டுகொள்ளவில்லை. ஆனால், உதயநிதியை முதல்வராக்கும் ஏற்பாடுகளை ஸ்டாலின் செய்து வருகிறார்.
நெல்லில் ஈரப்பதம் அதிகரிக்க தி.மு.க., அரசு தான் காரணம். அறுவடையின் போது கொள்முதல் செய்ய வேண்டியது, தமிழக அரசு பொறுப்பு. நெல்லை பாதுகாப்பாக வைக்க, சேமிப்பு கிடங்குகளை ஏற்படுத்தவில்லை. ஆனால், மத்திய அரசு 6 இடங்களில் சேமிப்பு கிடங்குகள் வைத்துள்ளது.
மழை பெய்வதை முன்கூட்டியே தெரிந்து கொள்ள, 10 கோடி ரூபாய் செலவில், கருவி வாங்கி வைத்திருக்கும் தமிழக அரசு, மழை வரும் என தெரிந்தும் என்ன செய்தது? மழையில், நெல்லை நனையவிட்டு, அவற்றை முளைக்கவிட்டு, அதன் பின், இழப்பீடு தாருங்கள் என்று கேட்பதில் என்ன நியாயம் இருக்கிறது.
இதற்கு, முழுக்க முழுக்க முதல்வர் ஸ்டாலின் தான் பொறுப்பு; மத்திய அரசு இல்லை. தன்னை, டெல்டாக் காரன் என்று சொல்லிக் கொள்ளும் ஸ்டாலின், டெல்டா விவசாயிகளை வஞ்சிக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.

