ADDED : ஆக 04, 2024 11:14 PM

பெங்களூரு: ''அமைச்சரவையை மாற்றம் செய்வது அல்லது அமைச்சர்களின் இலாகாக்களை மாற்றுவது, கட்சி மேலிடம் எடுக்கும் முடிவு,'' என்று, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறினார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
ஊழலுக்கு எதிராக ஊழல்வாதிகளே, பாதயாத்திரை நடத்துவது வேடிக்கையாக உள்ளது. பா.ஜ., மற்றும் ம.ஜ.த., ஆட்சி காலங்களில் நடந்த, ஊழல்கள் பற்றி, நாங்களும் மக்களிடம் எடுத்து சொல்வோம்.
யாத்கிர் எஸ்.ஐ., பரசுராம் மரணம் குறித்து, சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளேன். அவர் தற்கொலை செய்யவில்லை என்று, போலீஸ் அதிகாரிகளிடம் இருந்து, எனக்கு தகவல் கிடைத்து உள்ளது. ஆனாலும் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்து இருக்கிறோம்.
பரசுராம் மனைவி ஸ்வேதாவுக்கு போலீஸ் துறையில், பணி வழங்குவது குறித்து முடிவு எடுப்போம். 'மூடா' முறைகேட்டில் முதல்வருக்கு அனுப்பிய நோட்டீசை கவர்னர் திரும்ப பெற வேண்டும். இது தொடர்பாக, கவர்னரை சந்தித்து பேசிய, சமூக ஆர்வலர் ஆபிரஹாம் என்னை சந்தித்து, பாதுகாப்பு அளிக்கும்படி கேட்டு கொண்டுள்ளார்.
எங்கள் அரசின் செயல்பாடு குறித்து, கட்சி மேலிடத்திற்கு மூத்த தலைவர் மதுசூதன் மிஸ்திரி, அறிக்கை அளித்து உள்ளார். அந்த அறிக்கையில் என்ன உள்ளது என்று தெரியவில்லை.
அமைச்சரவை மாற்றம் செய்யப்படுமா அல்லது அமைச்சர்கள் இலாகாக்கள் மாற்றப்படுமா என்பது பற்றி, என்னிடம் எந்த தகவலும் இல்லை. எல்லாம் கட்சி மேலிடம் எடுக்கும் முடிவு.
இவ்வாறு அவர் கூறினார்.