ADDED : ஆக 08, 2024 11:50 PM
பெங்களூரு: பெங்களூரில் சில துப்பறிவு நிறுவனங்கள், சட்டவிரோதமாக செயல்படுவதாக, சி.சி.பி., போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி கடந்த மே மாதம் ராஜாஜிநகர், மஹாலட்சுமி லே - அவுட், விஜயநகரில் செயல்படும் துப்பறிவு நிறுவனங்களில், சி.சி.பி., போலீசார் சோதனை நடத்தினர்.
சிலரின் மொபைல் போன் அழைப்பு தகவல் பற்றிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக மகந்த் கவுடா, ரேவந்த், குருபாதசாமி, சீனிவாஸ், பாரத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் சட்டவிரோதமாக மொபைல் போன் அழைப்பு தகவலை பெற்று, அந்த தகவலை விற்று பணம் சம்பாதித்தது தெரிந்தது.
இந்த வழக்கில் ஆந்திராவை சேர்ந்த, நாகேஸ்வர ரெட்டி கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், மொபைல் போன் அழைப்பு தகவலை விற்றதில், பெங்களூரு சி.ஐ.டி., அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றும் போலீஸ்காரர் முனிரத்னாவுக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது.
நேற்று முன்தினம் இரவு முனிரத்னா கைது செய்யப்பட்டார்.
'கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு உள்ளதா, மனைவிக்கு வேறு ஆண்களுடன் தொடர்பு உள்ளதா' என்று அறிய, மொபைல் போன் அழைப்பு தகவலை எடுத்து தரும்படி, நாகேஸ்வர ரெட்டியிடம் சில தம்பதியர் கேட்டுள்ளனர். நாகேஸ்வர ரெட்டிக்கும், முனிரத்னாவும் பல ஆண்டுகளாக பழக்கம் இருந்தது.
சி.ஐ.டி.,யில் தொழில்நுட்ப பிரிவில் முனிரத்னா வேலை செய்வதால், அவரை வைத்து மொபைல் போன் அழைப்பை எடுக்க, முடிவு செய்தார். பணம் தருவதாக கூறி முனிரத்னாவை சம்மதிக்க வைத்தார்.
வழக்குகள் தொடர்பாக, மொபைல் போன் அழைப்புகளை சம்பந்தப்பட்ட, மொபைல் நிறுவனங்களிடம் இருந்து பெறுவதற்கு, உயர் போலீஸ் அதிகாரிகள் கையொப்பம் தேவைப்படும்.
உயர் அதிகாரிகள் கையெழுத்து போட்டு தரும் கடிதத்தில், யாருடைய மொபைல் போன் அழைப்புகள் தேவைப்படுகிறதோ, அந்த நம்பரையும் முனிரத்னா இணைத்து உள்ளார். இதன்மூலம் தங்களுக்கு தேவையானவர்களின், மொபைல் போன் அழைப்புகளை எடுத்து விற்றது தெரியவந்துள்ளது.