தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ லிங்காயத் சமூக ஓட்டுகள் காங்கிரசுக்கு கிடைக்குமா?

லிங்காயத் சமூக ஓட்டுகள் காங்கிரசுக்கு கிடைக்குமா?

லிங்காயத் சமூக ஓட்டுகள் காங்கிரசுக்கு கிடைக்குமா?


ADDED : மார் 26, 2024 06:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2024 06:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தென்மாநிலங்களில் பா.ஜ., ஆட்சிக்கு வந்த ஒரே மாநிலம் கர்நாடகா மட்டும் தான். இதற்கு முக்கிய காரணம் முன்னாள் முதல்வர் எடியூரப்பா.

கர்நாடகாவின் வடமாவட்டங்களில் உள்ள தொகுதிகளில், எந்த கட்சி வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பதை தீர்மானிப்பதில், லிங்காயத் ஓட்டுகள் முக்கிய பங்கு வகிக்கிறது.

எடியூரப்பாவும் லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர். அவருக்கு வடமாவட்டங்களில் உள்ள, லிங்காயத் சமூக மடாதிபதிகளுடன் நல்லுறவு உள்ளது.

ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் எப்போதும், லிங்காயத் மடாதிபதிகளுடன் சுமுக உறவு வைத்து கொண்டது இல்லை. ஆட்சியிலும், அதிகாரத்திலும் லிங்காயத்துகளுக்கு, காங்கிரஸ் அநீதி இழைக்கிறது என்று அவ்வப்போது, குற்றச்சாட்டுகள் எழும்.

கடந்த 1989ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. லிங்காயத் சமூகத்தை சேர்ந்த, வீரேந்திர பாட்டீல் முதல்வர் ஆனார்.

ஆனால் கட்சியில் ஏற்பட்ட குழப்பத்தால் 314 நாட்களில், முதல்வர் பதவியில் இருந்து, அவரை காங்கிரஸ் இறக்கிவிட்டது. அதன்பின்னர் இதுவரை லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு, காங்கிரசில் முதல்வர் பதவி எட்டாக்கனியாக மாறிவிட்டது.

2ஏ இடஒதுக்கீடு


ஆனால் கடந்த 2008ல் இருந்து 2018 வரை நடந்த மூன்று சட்டசபை தேர்தல்களில், பா.ஜ.,வின் எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர், பசவராஜ் பொம்மை என, லிங்காயத் சமூகத்தை சேர்ந்த மூன்று பேர் முதல்வர் பதவியை அலங்கரித்து விட்டனர். இதனால் லிங்காயத் மக்கள் முழுக்க, முழுக்க பா.ஜ.,வை நம்பினர்.

கடந்த 2019 லோக்சபா தேர்தலில், வடமாவட்டங்களில் உள்ள தொகுதிகளில், பா.ஜ.,வை, லிங்காயத் சமூகத்தினர் முழுமையாக ஆதரித்தனர். இதனால் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.

இந்நிலையில், 2019ல் எடியூரப்பா இரண்டாவது முறை முதல்வராக இருந்த போது, லிங்காயத்தின் உட்பிரிவான பஞ்சமசாலி சமூகத்தினர் தங்களுக்கு, 2ஏ இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று, கோரிக்கை வைத்தனர். ஆனால், இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை.

இதற்கிடையில், எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து இறக்கப்பட்டார். அவருக்கு பின் முதல்வர் ஆன பசவராஜ் பொம்மையை, பாகல்கோட்டில் உள்ள கூடல சங்கம பஞ்சமசாலி மடத்தின், மடாதிபதி பசவ ஜெய மிருத்யுஞ்ஜெய சுவாமி அடிக்கடி சந்தித்து, பஞ்சமசாலி சமூகத்திற்கு 2ஏ இடஒதுக்கீடு கேட்டார். ஆனால், பசவராஜ் பொம்மையும் நடவடிக்கை எடுக்கவில்லை.

கோபத்தில் பஞ்சமசாலிகள்


இதனால் பா.ஜ., அரசை கண்டித்து, மடாதிபதி பசவ ஜெய மிருத்யுஞ்ஜெய சுவாமி, பெங்களூரில் 100 நாட்களுக்கு மேல், போராட்டம் நடத்தினார். கட்சி பாகுபாடின்றி லிங்காயத் சமூக எம்.எல்.ஏ.,க்கள், மடாதிபதிக்கு ஆதரவு அளித்தனர். கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்கு முன், பஞ்சமசாலி சமூகத்திற்கு 2டி இடஒதுக்கீடு வழங்கி, அரசு உத்தரவிட்டது.

ஆனால், அதை பஞ்சமசாலிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. தங்களுக்கு 2ஏ இடஒதுக்கீடு தான் வேண்டும் என்று, பிடிவாதமாக கூறிவிட்டனர்.

இந்நிலையில் சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பஞ்சமசாலி சமூகத்தினர், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 2ஏ இடஒதுக்கீடு வாங்கி தர நடவடிக்கை எடுப்பதாக, மடாதிபதியிடம் உறுதி அளித்தனர்.

இதனால் சட்டசபை தேர்தலில், லிங்காயத் சமூகம், காங்கிரசை ஆதரித்து, ஆட்சிக்கு வர வைத்தது. ஆனால், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னரும், இதுவரை 2ஏ இடஒதுக்கீடு குறித்து, அரசிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. மடாதிபதி தலைமையில், வடமாவட்டங்களில் போராட்டமும் நடந்தது.

'லோக்சபா தேர்தலுக்கு முன்பு 2ஏ இடஒதுக்கீடு குறித்து, அரசு பதிலளிக்க வேண்டும்' என்று, மடாதிபதி எச்சரிக்கை விடுத்தும் எதுவும் நடக்கவில்லை. இதனால், காங்கிரஸ் அரசு மீது பஞ்சமசாலிகள் கோபத்தில் உள்ளனர்.

லோக்சபா தேர்தலில் காங்கிரசை ஆதரிப்பரா என்று, கேள்வி எழுந்து உள்ளது. ஆனால், மடாதிபதியை சமாதானப்படுத்தி காங்கிரசுக்கு ஓட்டு வாங்குவதற்காக, அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர், பஞ்சமசாலி சமூக காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களை, துாதுவர்களாக பயன்படுத்தவும் அரசு திட்டமிட்டு உள்ளது.

2ஏ இடஒதுக்கீடு வாங்கி தராததை காரணம் காட்டி, காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் செய்யவும், பா.ஜ., தலைவர்கள் தயாராகி வருகின்றனர்

- நமது நிருபர் -.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us