சோனியா, ராகுல் குறித்து அவதுாறு வங்கதேச பத்திரிகையாளர் மீது வழக்கு
சோனியா, ராகுல் குறித்து அவதுாறு வங்கதேச பத்திரிகையாளர் மீது வழக்கு
ADDED : செப் 03, 2024 12:24 AM

பெங்களூரு: காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா மற்றும் ராகுல் குறித்து, சமூகவலைதளத்தில் அவதுாறு கருத்துக்களை பரப்பிய வங்கதேச பத்திரிகையாளர் உட்பட இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கர்நாடகா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், வழக்கறிஞருமான ஸ்ரீனிவாஸ் என்பவர், பெங்களூரு ஹைகிரவுண்ட் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று முன்தினம் புகார் ஒன்றை அளித்தார். அதன் விபரம்:
வங்கதேசத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் சலாஹா உதின் ஷோயப் சவுத்ரி. இவர் தன் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், காங்., - எம்.பி., சோனியாவை ஐ.எஸ்.ஐ., ஏஜென்ட் என்று குறிப்பிட்டுள்ளார். கலப்பு திருமணம் செய்த பின்னும், இப்போது வரை சோனியா கிறிஸ்துவ மதத்தை பின்பற்றி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இரு மதத்தினர் இடையே பிளவை ஏற்படுத்தும் விதமான கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
மேலும், காங்., - எம்.பி., ராகுல் தன் வெளிநாட்டு நண்பருடன் சேர்ந்து பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை, அதிதி என்ற பெண், 'தி ஜெய்ப்பூர் டயலாக்ஸ்' என்ற தன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, ஷோயப் சவுத்ரி, அதிதி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துஉள்ளனர்.
பத்திரிகையாளர் ஷோயப் சவுத்ரி, 'பிளிட்ஸ் பங்களாதேஷ் என்ற பத்திரிகையின் ஆசிரியர் என்றும், விருது வென்ற செய்தியாளர் என்றும், பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர் என்றும் தன்னைப் பற்றி சமூகவலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.