'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் புறக்கணிப்பு; வருவாய் துறையினருக்கு சம்பளம் பிடிப்பு
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் புறக்கணிப்பு; வருவாய் துறையினருக்கு சம்பளம் பிடிப்பு
ADDED : செப் 27, 2025 06:50 AM

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமை புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, வருவாய் துறை அலுவலர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்களை, வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டும் நடத்த வேண்டும். இதில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது முடிவெடுக்க, கால அவகாசம் வழங்க வேண்டும்.
ஆய்வு கூட்டம் என்ற பெயரில், பணி நெருக்கடி தருவதை தவிர்க்க வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர், கடந்த 3 மற்றும் 4 ம்தேதிகளில் 48 மணிநேர தொடர் போராட்டம் நடத்தினர்.
மேலும், 25ம் தேதி முதல், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமை புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம், போராட்ட காலங்களில் பணிக்கு வராதவர்களுக்கு, 'நோ ஒர்க் நோ பே' என்ற அடிப்படையில், சம்பளம் பிடித்தம் செய்ய வேண்டும்.
முன் அனுமதியின்றி பணிக்கு வராதவர்களிடம், அதற்கான காரணம் குறித்து விளக்கம் கேட்க வேண்டும் என, துறை செயலர்கள், அனைத்து மாவட்ட கலெக்டர்கள், வருவாய் நிர்வாக ஆணையர் உள்ளிட்டோருக்கு, வருவாய்துறை செயலர் அமுதா உத்தரவிட்டுள்ளார்.