உருவபொம்மை எரிக்க முயற்சி பா.ஜ.,---எம்.எல்.ஏ., மீது வழக்கு
உருவபொம்மை எரிக்க முயற்சி பா.ஜ.,---எம்.எல்.ஏ., மீது வழக்கு
ADDED : செப் 10, 2024 06:56 AM

உடுப்பி: கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையாவை கண்டித்து அவரது உருவபொம்மையை எரிக்க முயற்சித்த, உடுப்பி பா.ஜ., - எம்.எல்.ஏ., யஷ்பால் சுவர்ணா உட்பட 11 பேர் மீது மணிப்பால் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பா.ஜ., ஆட்சியின்போது, உடுப்பியில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் எனும் முகத்தை மறைக்கும் துணியை அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டது. அதை மீறி, குந்தாபூரில் உள்ள அரசு பட்டப்படிப்பு கல்லுாரிக்கு வந்த மாணவியரை, முதல்வர் ராமகிருஷ்ணா வெளியே அனுப்பினார். இந்த படம், சமூக வலைதளங்களில் பரவியது.
சமீபத்தில் மாநில நல்லாசிரியர் விருது, ராமகிருஷ்ணாவுக்கு அறிவிக்கப்பட்டது. இதையறிந்த ஹிஜாப்புக்கு ஆதரவு தெரிவிப்போர், எதிர்ப்புத் தெரிவித்தனர். எதிர்ப்புக்கு பணிந்த அரசு, விருதை நிறுத்தி வைத்தது.
இதற்கு கண்டனம் தெரிவித்து, இம்மாதம் 6ம் தேதி மணிப்பாலில் பா.ஜ., - எம்.எல்.ஏ., யஷ்பால் சுவர்ணா உட்பட கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது, முதல்வர் சித்தராமையாவின் உருவ பொம்மையை எரிக்க முயற்சித்தனர். ஆனால், அதற்குள் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து, மாணவர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சவுரப் பல்லால், மணிப்பால் போலீசில் புகார் செய்தார். இதன்படி, எம்.எல்.ஏ., உட்பட 11 பேர் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
படம்: யஷ்பால் சுவர்ணா

