அனைத்து மதங்களையும் நம்புகிறேன்: பிரியாவிடை நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உருக்கம்
அனைத்து மதங்களையும் நம்புகிறேன்: பிரியாவிடை நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உருக்கம்
ADDED : நவ 20, 2025 09:44 PM

புதுடில்லி: நான் அனைத்து மதங்களையும் நம்புகிறேன் என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறினார்.
நீதிபதி கவாய், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஆன முதல் புத்தம் மற்றும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இரண்டாவது நீதிபதி ஆவார்.
அவரது தந்தை ஆர்.எஸ். கவாய், ஒரு அரசியல்வாதியும், சமூக ஆர்வலரும் ஆவார்,2025 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்டின் 52வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட கவாய் நவம்பர் 23 ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். சுப்ரீம் கோர்ட்டில் நாளையுடன் (நவம்பர் 21) அவரது பணி நிறைவு பெறுகிறது.
இந்த நிலையில் டில்லியில் பிரியாவிடை நிகழ்ச்சியில் பி.ஆர்.கவாய் பேசியதாவது:
நான் பவுத்த மதத்தை பின்பற்றுகிறேன். ஆனால் எந்த மத ஆய்வுகளிலும் எனக்கு ஆழமான அறிவு இல்லை. நான் உண்மையாக ஒரு மதச்சார்பற்ற மனிதர் தான். அதே வேளையில், இந்து, பவுத்தம், சீக்கியம், முஸ்லிம், கிறிஸ்துவம் உள்பட அனைத்து மதங்களையும் நம்புகிறேன்.
நான் சுப்ரீம் கோர்ட்டில் என்னவாக இருக்கிறேனோ, அதற்கு எப்போதும் நன்றி உள்ளவனாக இருப்பேன். டாக்டர் அம்பேத்கர், அரசியலமைப்புச் சட்டத்தால்தான் நான் இந்த நிலையை அடைந்தேன். கடந்த ஆறரை ஆண்டுகளில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக என்னால் என்ன செய்ய முடிந்ததோ அதை செய்தேன்.
சுப்ரீம் கோர்ட், தலைமை நீதிபதியை மையமாகக் கொண்டிருக்கக்கூடாது, மாறாக அனைத்து நீதிபதிகளையும் மையமாகக் கொண்டிருக்க வேண்டும் என்று நான் எப்போதும் நம்பினேன். முடிவுகள் என்னால் தனிப்பட்ட முறையில் எடுக்கப்படவில்லை, ஆனால் முழு நீதிமன்றத்திற்கும், விசாரணைகளுக்கும் முன்பாக வைக்கப்பட்டன.
சுப்ரீம் கோர்ட், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பதிவாளர்கள், ஊழியர்கள் போன்ற அனைவரின் பங்களிப்போடு சிறப்பாக செயல்படுகிறது.இவ்வாறு கவாய் பேசினார்.

