அனில் அம்பானியின் ரூ.1,452 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
அனில் அம்பானியின் ரூ.1,452 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
UPDATED : நவ 20, 2025 10:05 PM
ADDED : நவ 20, 2025 09:57 PM

புதுடில்லி: வங்கியில் கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் மோசடி செய்த வழக்கில், அனில் அம்பானிக்கு சொந்தமான 1,452 கோடி மதிப்பு சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
'ரிலையன்ஸ்' குழும தலைவர் முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி, 66, வங்கி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஒரு நிறுவனத்தின் பெயரில் பெற்ற கடன், சட்டவிரோதமாக மற்ற நிறுவனங்களுக்கு மாற்றம் செய்ததாக அனில் அம்பானி மீது குற்றம்சாட்டப்பட்டது.
அனில் அம்பானி, 17,000 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக இரண்டு வழக்கு களை சி.பி.ஐ., பதிவு செய்தது. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது.
2010 - 2012 காலகட்டத்தில் அனில் அம்பானி குழுமம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து மொத்தம் ரூ.40,185 கோடி கடன் பெற்றுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த நிறுவனம் பெற்ற கடனை மோசடி என 9 வங்கிகள் அறிவித்துள்ளன. ஒரு நிறுவனத்திற்காக ஒரு வங்கியில் பெறப்பட்ட கடன் தொகை மற்ற நிறுவனங்களுக்காக மற்ற வங்கிகளுக்கு திருப்பி செலுத்தப்படுவதற்கும், பரஸ்பர நிதியில் முதலீடு செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டதும் அமலாக்கத்துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
12,600 கோடி ரூபாய் கடனை அடைப்பதற்காக அனில் அம்பானியின் நிறுவனங்கள் 13,600 கோடி ரூபாயை வேறு நிறுவனங்களுக்கு அளித்ததும், 1,800 கோடி ரூபாயை பரஸ்பர நிதியில் முதலீடு செய்ததும் தெரியவந்ததாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. இந்த விவகாரத்தில் அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதுவரை அவருக்கு சொந்தமான சொந்தமான 7,500 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
இந்நிலையில், மேலும் 1,452.51 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், நவி மும்பையில் உள்ள திருபாய் அம்பானி அறிவு நகரம் மற்றும் மில்லேனியம் வணிக பூங்கா, புனே, சென்னை, புவனேஸ்வரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கட்டடங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். இதன் மூலம் அனில் அம்பானியின் முடக்கப்பட்ட சொத்துக்களின் மொத்த மதிப்பு 8,997 கோடி ரூபாய் ஆக அதிகரித்துள்ளது. இது குறித்து அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனம் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

