ADDED : மே 20, 2024 05:30 AM

மங்களூரு, : கைதானவரை விடுவிக்க கோரி, போலீஸ் நிலையத்திற்குள் அத்துமீறி போராட்டம் நடத்தியதுடன், எஸ்.ஐ.,யை திட்டியதாக, பா.ஜ., - எம்.எல்.ஏ., ஹரிஷ் பூஞ்சா மீது வழக்கு பதிவானது.
தட்சிண கன்னடா பெல்தங்கடி மேலந்தபெட்டு என்ற இடத்தில், சட்டவிரோதமாக கல்குவாரி நடத்துவதாக, பெல்தங்கடி தாசில்தார் பிரித்வி சனிகமுக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் இரவு தாசில்தார், போலீசார் இணைந்து, கல்குவாரியில் சோதனை நடத்தினர்.
நான்கு டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட, வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த கல்குவாரியில் இருந்த பா.ஜ., தொண்டர், சசிராஜ் ஷெட்டி கைது செய்யப்பட்டார்.
இதுபற்றி பெல்தங்கடி பா.ஜ., - எம்.எல்.ஏ., ஹரிஷ் பூஞ்சாவுக்கு, தகவல் கிடைத்தது. ஆதரவாளர்களுடன் பெல்தங்கடி போலீஸ் நிலையம் சென்றார். 'சசிராஜ் ஷெட்டி அப்பாவி, அவரை விடுவிக்க வேண்டும்' என்று கூறினார்.
ஆனால் எஸ்.ஐ., முரளிதர் நாயக் மறுத்தார். இதனால் போலீஸ் நிலையத்திற்குள் அமர்ந்து, ஹரிஷ் பூஞ்சா போராட்டம் நடத்தினர்.
அவரை சமாதானப்படுத்த முயன்ற, எஸ்.ஐ., முரளிதர் நாயக்கையும் திட்டி உள்ளார்.
போலீஸ் நிலையத்தில் அத்துமீறி புகுந்து போராட்டம் நடத்தியதுடன், தன்னை பணி செய்யவிடாமல் தடுத்து திட்டியதாக, ஹரிஷ் பூஞ்சா மீது, எஸ்.ஐ., முரளிதர் நாயக் நேற்று புகார் செய்தார். அதன்படி, ஹரிஷ் பூஞ்சா மீது வழக்கு பதிவானது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பெல்தங்கடியில் வனப்பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட வீடுகளை, வனத்துறையினர் அகற்ற முயன்ற போது, வன அதிகாரி ஒருவரை, ஹரிஷ் பூஞ்சா ஆபாசமாக திட்டினார். அதனால் அவர் மீது வழக்கு பதிவானது குறிப்பிடத்தக்கது.

