ADDED : மார் 23, 2024 08:34 PM

புதுடில்லி: 'சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நான்கு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், ஜனாதிபதி நிலுவையில் வைத்துள்ளது சட்டவிரோதமானது' என அறிவிக்கக் கோரி, கேரள அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாக்களை, ஜனாதிபதியின் பார்வைக்கு கவர்னர் அனுப்பியது செல்லாது என அறிவிக்கும்படியும் கோரப்பட்டுள்ளது.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது.
மாநில அரசுக்கும், கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே, பல விஷயங்களில் மோதல் போக்கு இருந்து வந்தது. பல மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பு செய்வதாக, கவர்னருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கில், கடந்தாண்டு நவம்பர் 20ல் கேரள கவர்னருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதைத் தொடர்ந்து, நிலுவையில் இருந்த ஏழு மசோதாக்களை ஜனாதிபதி திரவுபதி முர்முவின் பார்வைக்காக கவர்னர் அனுப்பி வைத்தார்.
அதன்பின், நவம்பர் 29ல் வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீண்ட காலமாக மசோதாக்களை நிலுவையில் வைத்திருந்ததற்காக கவர்னருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில், கடந்த பிப்., 29ல் ஜனாதிபதி திரவுபதி முர்மு, மூன்று மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தார்; அதே நேரத்தில் நான்கு மசோதாக்களை நிலுவையில் வைத்துள்ளார்.
அவசியமே இல்லை
இவை தொடர்பாக, கேரள அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:
கேரள சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஏழு மசோதாக்கள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளன. அவற்றுக்கு ஒப்புதல் கிடைக்காததால், அரசால் இயங்க முடியவில்லை.
இந்த ஏழு மசோதாக்களும், மத்திய -- மாநில அரசுகள் உறவு தொடர்பானவை அல்ல. அதனால், இந்த மசோதாக்களை ஜனாதிபதியின் பார்வைக்கு கவர்னர் அனுப்பியது தவறு. அதுவும், ஏழு முதல் 24 மாதங்கள் வரை நிலுவையில் வைத்திருந்தார்.
தற்போது, ஏழு மசோதாக்களில் மூன்றுக்கு மட்டுமே ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். அதே நேரத்தில், நான்கு முக்கிய மசோதாக்களை அவர் நிலுவையில் வைத்துள்ளார். இதற்கான எந்த காரணமும் தெரிவிக்கப்படவில்லை.
மாநில பல்கலைகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் தொடர்பானவை அந்த மசோதாக்கள். இவை, மாநிலத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டவை; இவற்றைஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்ப வேண்டிய அவசியமே இல்லை.
தற்போதைய நிலையில், 2021ல் நிறைவேறியபல்கலை சட்டங்கள் திருத்த மசோதா எண் இரண்டு; 2022ல் நிறைவேறிய கேரள கூட்டுறவு சொசைட்டிகள் திருத்த மசோதா; 2022ல் நிறைவேறிய பல்கலை சட்டங்கள் திருத்த மசோதா; 2022ல் நிறைவேறியபல்கலை சட்ட திருத்த மசோதா எண் மூன்று ஆகியவை நிலுவையில் உள்ளன.
மாநில அமைச்சரவை தன் பரிந்துரையுடன் அனுப்பிய, கவர்னரால் நிறுத்தி வைக்கப்பட்ட ஏழு மசோதாக்களில், நான்கு மசோதாக்கள் ஜனாதிபதியிடம் நிலுவையில் உள்ளன. இவை, அரசியலமைப்பு சட்டத்தின், 14, 200 மற்றும் 201 பிரிவுகளை மீறும் தன்னிச்சையான நடவடிக்கையாகும்.
மாநில சட்டசபையில், 11 முதல் 24 மாதங்களுக்கு முன் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நிறுத்தி வைக்கும்படி, ஜனாதிபதிக்கு மத்திய அரசு ஆலோசனை வழங்கியுள்ளது. இது, கூட்டாட்சி தத்துவம் மற்றும் மாநில அரசின் நிர்வாகத்தில் தலையிடுவதாக அமைந்து விடும்.
அரசியலமைப்பு சட்டத்தின் 200வது பிரிவு, எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக மசோதாக்கள் மீது முடிவு எடுக்க வேண்டும் என, கூறியுள்ளது. ஆனால், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு தன்னிடம் கவர்னர் நிலுவையில் வைத்திருந்தார்.
அதன்பின், தன் அதிகார எல்லைக்கு உட்பட்டு இருந்தபோதும், இழுத்தடிப்பு செய்வதற்காகவே ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்க, கவர்னர் கூறியுள்ள காரணம் ஏற்புடையதாக இல்லை. இந்த மசோதாக்கள், மத்திய அரசுக்கும், மாநில சட்டசபைக்கும் இடைப்பட்ட விவகாரம் இல்லை.
அரசியலமைப்பு சட்டத்தின் 213வது பிரிவின்படி, அவசர சட்டம் உள்ளிட்ட விவகாரங்களில் மட்டுமே, ஜனாதிபதிக்கு மசோதாவை பரிந்துரை செய்ய முடியும். அதனால், கவர்னர் கூறியுள்ள காரணம் நியாயமற்றது மற்றும் சட்டத்துக்கு எதிரானது.
சட்டவிரோதமானது
எனவே, ஜனாதிபதியின் பார்வைக்கு அனுப்பி வைக்க கவர்னர் எழுதியுள்ள குறிப்புகளை கேட்டு பெற்று, அவை செல்லாது என, அறிவிக்க வேண்டும். ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கும் கவர்னரின் முடிவு சட்டவிரோதமானது என, அறிவிக்க வேண்டும்.
மேலும், மசோதாக்களை ஜனாதிபதி நிலுவையில் வைத்திருப்பதற்கான காரணங்களுடன் கோப்புகளை கேட்டு பெற்று, அவை செல்லாது என, அறிவிக்க வேண்டும். மசோதாக்களை நீண்ட காலம் நிலுவையில் வைத்திருப்பது செல்லாது என்றும் அறிவிக்க வேண்டும்.
நிலுவையில் உள்ள அனைத்து மசோதாக்களுக்கும் விரைவாக ஒப்புதல் அளிக்கும்படி கவர்னருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

