தேர்தல் நடத்தை விதிகளை மீறுவோர் மீது வழக்கு: போலீசுக்கு ஆணையம் அதிரடி உத்தரவு
தேர்தல் நடத்தை விதிகளை மீறுவோர் மீது வழக்கு: போலீசுக்கு ஆணையம் அதிரடி உத்தரவு
ADDED : ஏப் 02, 2024 01:21 AM

சென்னை: தமிழகத்தில், லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. பிரசாரத்தின்போது, வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு, வேட்பாளர்கள் பணம் கொடுப்பது; கூட்டத்திற்கு அழைத்து வரப்படும் மக்களுக்கு பணம் கொடுப்பது போன்ற வீடியோக்கள், சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.
இவை குறித்து, அரசியல் கட்சிகள் தரப்பில், மாவட்ட தேர்தல் அலுவலர்களிடம் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதேபோல், பிரசாரத்தின்போது அடுத்த கட்சியினரை அவதுாறாகப் பேசுவது தொடர்பாகவும் புகார்கள் வந்துள்ளன.
அவற்றை விசாரித்து, தவறு செய்தவர்கள் மீது, வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என, தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது.
இது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறுகையில், ''தேர்தல் நடத்தை விதிகளை மீறுவோர் மீது, இந்திய தண்டனை சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய, மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் போலீஸ் எஸ்.பி.,க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,'' என்றார்.
சத்யபிரதா சாஹு மேலும் கூறியதாவது:
தலைமை தேர்தல் கமிஷனர், தேர்தல் தொடர்பாக, நாளை அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி, தலைமை செயலர், டி.ஜி.பி., மற்றும் முக்கிய அலுவலர்களுடன், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
நாளை மறுதினம் மாலை 5:00 மணிக்கு, அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் போலீஸ் எஸ்.பி.,க்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
தேர்தல் விதிமீறல் தொடர்பாக பொதுமக்கள், 'சி - விஜில்' எனும் மொபைல் போன் செயலி வாயிலாக புகார் செய்ய முன்வர வேண்டும்.
வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் யாரேனும் கொடுத்தால், அது தொடர்பான வீடியோ, புகைப்படத்தை, செயலியில் பதிவேற்றம் செய்யலாம்.
அதே இடத்தில் பதிவேற்றம் செய்யும்போது, அதிகாரிகள் 100 நிமிடத்திற்குள், அங்கு வந்து விசாரித்து நடவடிக்கை எடுப்பர். புகார் அளிப்பவர்கள் குறித்த விபரம் ரகசியம் காக்கப்படும். எனவே, பொதுமக்கள் தைரியமாக புகார் அளிக்க முன்வர வேண்டும்.
இதுவரை, சி - விஜில் வழியாக, 1,822 புகார்கள் வந்துள்ளன. இவற்றில், 19 மட்டும் விசாரிக்கப்பட வேண்டியுள்ளது. மற்றவை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில், ஒலி - ஒளி காட்சி ஒளிபரப்பப்படுவதை நிறுத்த வேண்டும் என, அ.தி.மு.க., சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதன் மீதான நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்கும்படி, செய்தித் துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறினார்.

