ADDED : செப் 10, 2024 06:58 AM

பெங்களூரு: தன் மீது தொடரப்பட்ட போக்சோ வழக்கை ரத்து செய்யக் கோரி, முன்னாள் முதல்வர் எடியூரப்பா தொடர்ந்த வழக்கு, வரும் 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
முன்னாள் முதல்வர் எடியூரப்பாவிடம் உதவி கேட்பதற்காக, நடப்பாண்டு பிப்ரவரியில், பெண் ஒருவர், தனது 17 வயது மகளுடன் அவரை பார்க்க சென்றார். இதன் பின், மார்ச் மாதம், எடியூரப்பா, தன் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சதாசிவ நகர் போலீசில் அப்பெண் புகார் செய்தார்.
இவ்வழக்கை, சி.ஐ.டி.,க்கு மாற்றி, மாநில அரசு உத்தரவிட்டது.
தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் எடியூரப்பா வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு நேற்று நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது சி.ஐ.டி., தரப்பில் ஆஜரான வக்கீல் அசோக் நாயக் கூறியதாவது:
இவ்வழக்கில் மூத்த வழக்கறிஞர் ரவிவர்மகுமாரை, சிறப்பு அரசு வழக்கறிஞராக, மாநில அரசு இம்மாதம் 3ம் தேதி நியமித்துள்ளது. இவ்வழக்கிற்கு சம்பந்தப்பட்ட விஷயங்களை படிக்க வேண்டும். எனவே, வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கேட்டுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து நீதிபதி, ''வழக்கு விசாரணையை வரும் 19ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அடுத்த விசாரணைக்கு வரும் வரை, எடியூரப்பாவை கைது செய்ய விதிக்கப்பட்ட இடைக்கால தடை தொடரும்,'' என்றார்.