பெண் அளித்த பாலியல் புகார்; நடிகர் நிவின் பாலி மீது வழக்கு
பெண் அளித்த பாலியல் புகார்; நடிகர் நிவின் பாலி மீது வழக்கு
ADDED : செப் 04, 2024 05:32 AM

திருவனந்தபுரம்: மலையாள திரைப்பட நடிகர் நிவின் பாலி மீது பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்ததை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மலையாள திரையுலகில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள் கொடுக்கப்படுவதாக, சமீபத்தில் வெளியிடப்பட்ட நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையில் தெரிவிக்கப் பட்டது.
இது கேரளாவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணை
பிரபல மலையாள நடிகர்கள் சித்திக், முகேஷ், மணியன்பிள்ளா ராஜு, இடவேளா பாபு, ஜெயசூர்யா, இயக்குனர் ரஞ்சித் உள்ளிட்டோர் பாலியல் புகாரில் சிக்கிஉள்ளனர். அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மலையாள நடிகர் நிவின் பாலி மீதும் பாலியல் புகார் எழுந்துள்ளது. அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இவர், தமிழில் நேரம் என்ற படத்தின் வாயிலாக அறிமுகமானார். தற்போதும் சில தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.
எர்ணாகுளம் மாவட்டம் ஊன்னுக்கல் பகுதியைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர், சிறப்பு புலனாய்வு குழுவிடம் நடிகர் நிவின் பாலி உட்பட ஆறு பேர் மீது பாலியல் புகார் அளித்துள்ளார்.
இதில், 'கடந்த ஆண்டு நவம்பரில், திரைப்படத்தில் நடிக்க வைப்பதாக கூறி ஸ்ரேயா என்பவர், என்னை துபாய் அழைத்துச் சென்றார்.
ஆனால், அங்கு தனியார் சொகுசு ஹோட்டலில் தயாரிப்பாளர் சுனில், நடிகர் நிவின் பாலி, பினு, பஷீர், குட்டன் ஆகியோர் என்னை பாலியல் பலாத்காரம் செய்தனர்.
எனவே, இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்' என, குறிப்பிட்டுள்ளார்.
குற்றச்சாட்டு
இதன்படி, இவ்வழக்கில் முதல் குற்றவாளியாக ஸ்ரேயா என்ற பெண்ணையும், தயாரிப்பாளர் சுனிலை இரண்டாவது குற்றவாளியாகவும், நடிகர் நிவின் பாலியை ஆறாவது குற்றவாளியாகவும் சேர்த்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே இந்த குற்றச்சாட்டை நடிகர் நிவின் பாலி மறுத்துள்ளார். இதை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என தெரிவித்துள்ளார்.