பாக். மனித உரிமை மீறல்களை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்: ஐநாவில் இந்தியா வலியுறுத்தல்
பாக். மனித உரிமை மீறல்களை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்: ஐநாவில் இந்தியா வலியுறுத்தல்
ADDED : அக் 25, 2025 07:57 AM

நியூயார்க்: பாகிஸ்தானால் சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மனித உரிமை மீறல்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் வலியுறுத்தி உள்ளார்.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நடந்த கூட்டத்தில், பர்வதனேனி ஹரிஷ் பேசியதாவது: ஜம்மு காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். பாகிஸ்தானால் சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு உள்ள பகுதிகளில் மனித உரிமை மீறல்களை முடிவுக்கு வர கொண்டு வேண்டும். ஜம்மு காஷ்மீர் மக்கள் இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தின் படி தங்கள் அடிப்படை உரிமைகளைப் பெறுகின்றனர். இவை பாகிஸ்தானுக்கு அந்நியமான ஒன்று என நாங்கள் அறிவோம்.
நீதி, கண்ணியம்
பாகிஸ்தானின் ராணுவ ஆக்கிரமிப்பு, அடக்குமுறை உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் வெளிப்படையான கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். உலகை ஒரே குடும்பமாக நாங்கள் பார்க்கிறோம். அனைவருக்குமான நீதி, கண்ணியம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றில் இந்தியா உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளது.
மறுசீரமைப்பு
தொற்றுநோய்கள் முதல் பயங்கரவாதம் வரை மற்றும் பொருளாதாரம் முதல் காலநிலை மாற்றம் வரை என நாம் எதிர்கொள்ளும் உலகளாவிய சவால்கள் ஒன்றோடொன்று தொடர்புடையவை. ஐநாவின் தற்போதுள்ள 80 ஆண்டுகால கட்டமைப்பிற்கு உடனடி மற்றும் அடிப்படையான மறுசீரமைப்பு தேவை.
ஐக்கிய நாடுகள் சபை, உலகளாவிய பொது நலனுக்கானது என்பதை உணர வேண்டும். அதை வேண்டுமென்றே பலவீனப்படுத்த அனுமதிக்கவே கூடாது.
இவ்வாறு பர்வதனேனி ஹரிஷ் பேசினார்.

