ரஷ்ய எரிசக்தி துறை மீதான தடைகளை விரிவுப்படுத்த வேண்டும்: அமெரிக்காவுக்கு ஜெலன்ஸ்கி வேண்டுகோள்
ரஷ்ய எரிசக்தி துறை மீதான தடைகளை விரிவுப்படுத்த வேண்டும்: அமெரிக்காவுக்கு ஜெலன்ஸ்கி வேண்டுகோள்
ADDED : அக் 25, 2025 08:45 AM

கீவ்: ரஷ்ய எரிசக்தி துறை மீதான தடைகளை விரிவுப்படுத்த வேண்டும். ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ள நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை வழங்குமாறு அமெரிக்காவிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
போர் நிறுத்தத்திற்கு ரஷ்யா சம்மதிக்காததால், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அந்நாட்டின் இரு பெரிய கச்சா எண்ணெய் நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடையை அமல்படுத்தினார். ரஷ்ய அரசுக்கான மிகப்பெரிய வருவாய் ஆதாரமாக இந்நிறுவனங்கள் உள்ளன. இதனால் இந்த நிறுவனத்தின் மீதான தடைக்கு ரஷ்ய அதிபர் புடின் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து இருந்தார்.
இந்த சூழலில், ரஷ்யா உடனான நடந்து வரும் போரில் ஆதரவை பெறுவதற்காக, 20க்கும் மேற்பட்ட ஐரோப்பிய தலைவர்களுடன் சந்திப்புகளை நடத்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி லண்டன் சென்றுள்ளார். அங்கு வெளியுறவுத்துறை அலுவலகத்தில் நிகழ்ந்த நிருபர்கள் சந்திப்பில் ஜெலன்ஸ்கி கூறியதாவது:
ரோஸ்நெப்ட் மற்றும் லுகோயில் மீது மட்டுமல்ல அனைத்து ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களுக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும். ரஷ்ய ஏரிசக்தி துறை மீதான தடைகளை விரிவுப்படுத்த வேண்டும்.
நாங்கள் ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களை குறி வைத்து ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் ஏவி தாக்குதல் நடத்தி வருகிறோம். ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ள நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளை அமெரிக்கா வழங்க வேண்டும்.
இவ்வாறு ஜெலன்ஸ்கி கூறினார்.

