சீரானது தொழில்நுட்ப கோளாறு: அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமான சேவை மீண்டும் தொடக்கம்
சீரானது தொழில்நுட்ப கோளாறு: அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமான சேவை மீண்டும் தொடக்கம்
ADDED : அக் 25, 2025 08:43 AM

அலாஸ்கா; தொழில்நுட்ப கோளாறு சீர் செய்யப்பட்டதை அடுத்து, அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான சேவைகள் மீண்டும் தொடங்கி உள்ளன.
அமெரிக்காவின் மிக பெரிய விமான நிறுவனம் அலாஸ்கா ஏர்லைன்ஸ் ஆகும். இந்நிறுவனத்தின் விமான சேவைகளை தினமும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
அதன் இணையதளத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, அலாஸ்கா ஏர்லைன்சின் 360க்கும் மேற்பட்ட விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, பின்னர் அந்த சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
விமானங்கள் ரத்தானதால் ஆயிரக்கணக்கான பயணிகள் தவிப்புக்கு ஆளாகினர். இதையடுத்து, தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்யும் முயற்சியில் அதிகாரிகள் குழு இறங்கியது.
பலமணி நேர முயற்சிக்கு பின்னர், தொழில்நுட்ப கோளாறு முற்றிலும் சரி செய்யப்பட்டதாக அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிர்வாகம் அறிவித்து உள்ளது. இதுகுறித்து அறிக்கை ஒன்றை அந்நிறுவனம் வெளியிட்டு உள்ளது.
அதில் குறிப்பிட்டுள்ளதாவது;
தகவல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, விமான நிறுவனம், அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்திருந்தது. கோளாறு சரி செய்யப்பட்டு உள்ளதால் விமான சேவைகள் மீண்டும் தொடங்கி உள்ளன.
பொறுமையாக காத்திருந்த பயணிகள் அனைவருக்கும் நன்றி. நாங்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறோம். விமான நிலையங்கள் செல்லும் முன்பு பயணிகள் தங்கள் பயணத்திட்டங்களை சரிபார்த்துக் கொள்ள விரும்புகிறோம்.
இவ்வாறு அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

