'மாஜி' காதலிக்கு கொலை மிரட்டல் நடிகர் வருண் ஆரத்யா மீது வழக்கு
'மாஜி' காதலிக்கு கொலை மிரட்டல் நடிகர் வருண் ஆரத்யா மீது வழக்கு
ADDED : செப் 12, 2024 05:52 AM

பசவேஸ்வரா நகர்: முன்னாள் காதலிக்கு கொலை மிரட்டல் விடுத்த, சின்னத்திரை நடிகர் வருண் ஆரத்யா மீது, வழக்கு பதிவாகி உள்ளது.
கன்னட சின்னத்திரை தொடர் பிருந்தாவனில் நடிப்பவர் வருண் ஆரத்யா, 23. சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வருகிறார். அதில் அவர் பதிவிடும் புகைப்படங்கள், வீடியோக்களுக்கு அதிக லைக்குகள் கிடைக்கும்.
கடந்த 2019ல் வருணுக்கும், பெங்களூரு பசவேஸ்வரா நகரின் வர்ஷா காவேரி, 22 என்பவருக்கும், இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் இணைந்து 'ரீல்ஸ்' வீடியோக்கள் எடுத்து, இன்ஸ்டாகிராமில் வெளியிட்டனர். இருவரும் காதலித்தனர்.
கடந்த ஆண்டு கருத்து வேறுபாட்டால், இருவரும் பிரிந்தனர். இதுபற்றி தங்களது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்தனர். இந்நிலையில் கடந்த 9ம் தேதி, பெங்களூரு பசவேஸ்வரா நகர் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில், வர்ஷா காவேரி அளித்த புகார்:
நானும், சின்னத்திரை நடிகர் வருண் ஆரத்யாவும், 2019ல் இருந்து 2023 வரை காதலித்தோம். அவரது மொபைல் போனில், வேறு சில பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை, கடந்த ஆண்டு பார்த்தேன். இதுபற்றி கேட்டதால் எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தோம்.
அதன்பின், என்னிடம் மொபைல் போனில் பேசிய வருண் ஆரத்யா, வேறு பெண்களுடன் நெருக்கமாக எடுத்த புகைப்படங்கள் பற்றி, வெளியே சொல்ல கூடாது என்று என்னை மிரட்டினார்.
காதலிக்கும் போது என்னையும் அவர் ஆபாசமாக புகைப்படம் எடுத்து உள்ளார். அந்த புகைப்படத்தை சில மாதங்களுக்கு முன், எனக்கு அனுப்பி வைத்தார்.
என்னை பற்றி வெளியே சொன்னால், உன்னை கொலை செய்து விடுவேன். ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என கூறியதுடன், எனக்கு கொலை மிரட்டலும் விடுத்தார்.
தொடர்ந்து போன் செய்து, எனக்கு தொல்லை கொடுக்கிறார்.
இவ்வாறு புகாரில் கூறப்பட்டு இருந்தது.
புகாரின்படி, வருண் ஆரத்யா மீது போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர். விசாரணை நடக்கிறது.