காங்., தொண்டரை தாக்கியதாக பா.ஜ., - எம்.எல்.ஏ., மீது வழக்கு
காங்., தொண்டரை தாக்கியதாக பா.ஜ., - எம்.எல்.ஏ., மீது வழக்கு
ADDED : மார் 04, 2025 04:58 AM

மங்களூரு: காங்கிரஸ் தொண்டரை தாக்கியதாக, மங்களூரு தெற்கு பா.ஜ., - எம்.எல்.ஏ., வேதவியாஸ் காமத் மீது வழக்குப்பதிவாகி உள்ளது.
மங்களூரு டவுன் சக்திநகரில் உள்ள கிருஷ்ணா பஜனை மந்திரில் நேற்று முன்தினம் இரவு பிரம்ம கலச உற்சவம் நடந்தது. காங்கிரஸ் தொண்டரான யஷ்வந்த் பிரபு என்பவர், கோவிலில் தன்னார்வ தொண்டு செய்தார்.
கோவிலுக்கு வந்த மங்களூரு தெற்கு பா.ஜ., - எம்.எல்.ஏ., வேதவியாஸ் காமத், யஷ்வந்த் பிரபுவை பார்த்து, ''கோவில் மீது கற்களை வீசும் உங்களுக்கு இங்கு என்ன வேலை?'' என கிண்டலாக கேட்டுள்ளார்.
கோவிலில் சாமி தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்தபோது, வேதவியாஸ் காமத்திடம் சென்று, யஷ்வந்த் பிரபு உள்ளிட்ட காங்கிரஸ் தொண்டர்கள், 'எங்களை பார்த்து கற்களை வீசுபவர்கள் என, எப்படி கூறலாம்?' என்று கேள்வி எழுப்பினர்.
எம்.எல்.ஏ.,வுடன் வந்திருந்த அவரது ஆதரவாளர்கள் சிலர், யஷ்வந்த் பிரவுவை தாக்கினர். இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து யஷ்வந்த் பிரபு, மங்களூரு தெற்கு போலீசில் நேற்று புகார் செய்தார். புகாரில், 'என் கை, கால்களை உடைக்கும்படி வேதவியாஸ் காமத் கூறினார். என் மீதான தாக்குதலுக்கு அவர் தான் காரணம்' என குறிப்பிட்டு இருந்தார்.
இந்த புகாரின்படி எம்.எல்.ஏ., உட்பட ஏழு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விசாரணை நடக்கிறது.