ADDED : செப் 15, 2024 11:09 PM

குடகு: பிரசித்தி பெற்ற காவிரி தீர்த்தோற்சவம், அக்டோபர் 17ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
காவிரி ஆறு பிறப்பிடமான குடகு மாவட்டம், தலைகாவிரியில் ஆண்டுதோறும் காவிரி தீர்த்தோற்சவம் நடப்பது வழக்கம். அன்றைய தினம் பொங்கி எழும் காவிரி நீரை, பக்தர்களுக்கு தெளிக்கும் விழா மிகவும் விமரிசையாக நடத்தப்படும்.
அந்த வகையில், இந்தாண்டு எப்போது நடத்தலாம் என்பது குறித்து மடிகேரியில், ஹிந்து அறநிலைய துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
இதன் முடிவில், அக்டோபர் 17ம் தேதி காலை 7:40 மணிக்கு, துலா முகூர்த்தத்தில் காவிரி தீர்த்தோற்சவம் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது.
முன்னதாக, வரும் 26ம் தேதி காலை 8:35 மணிக்கு, தலைக்காவிரி குளத்தில் அரிசி சமர்ப்பணம் செய்யும் வைபவம் நடக்கிறது.
அக்., 4ம் தேதி, காலை 10:21 மணிக்கு, விருச்சிக முகூர்த்தத்தில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
அக்., 14ம் தேதி காலை 11:35 மணிக்கு, தனு முகூர்த்தத்தில் அக் ஷய பாத்திரம் சமர்ப்பணம் செய்யப்படுகிறது. அன்று மாலை 4:15 மணிக்கு, காணிக்கை உண்டியல் வைக்கப்படுகிறது.
கர்நாடகா மட்டுமின்றி, தமிழகம், கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவர் என்பதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விழா ஏற்பாடுகளை விமரிசையாக செய்யும்படி, மாவட்ட பொறுப்பு துறை அமைச்சரும், அறிவியல் துறை அமைச்சருமான போசராஜு உத்தரவிட்டுள்ளார்.