ADDED : ஆக 14, 2024 02:18 AM

கோல்கட்டா பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மேற்கு வங்க அரசிடம், கோல்கட்டா உயர் நீதிமன்றம் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளது. 'இதுவரை நடந்துள்ள போலீஸ் விசாரணை நம்பிக்கை ஏற்படுத்துவதாக இல்லை. மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் இந்த வழக்கு சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிடப்படுகிறது' என, அமர்வு கூறியுள்ளது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி அமைந்துள்ளது. தலைநகர் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி. கார் மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனையில், முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்த பயிற்சி பெண் டாக்டர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்.
மருத்துவமனையின் கூட்ட அரங்கில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, கோல்கட்டா போலீசின் போலீஸ் நண்பர்கள் குழுவின் தன்னார்வலர் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்ற விசாரணை அல்லது சி.பி.ஐ., விசாரணைக் கோரி, உயிரிழந்த மாணவியின் பெற்றோர் உட்பட பலர் கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
காயங்கள்
இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம், நீதிபதி ஹிரண்மய் பட்டாச்சார்யா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில அரசு வழக்கறிஞரிடம், அமர்வு அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பியது. காலையில் துவங்கிய விசாரணை, மதிய இடைவேளைக்குப் பின்னும் தொடர்ந்தது. அமர்வு கூறியுள்ளதாவது:
இந்த சம்பவம், கல்லுாரி வளாகத்துக்குள் நடந்துள்ளது. ஏதோ சாலையில் நடந்ததுபோல், இயற்கைக்கு மாறான மரணம் என்று முதலில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவியின் உடலில் பல காயங்கள் உள்ள நிலையில், ஏன் யாருக்கும் எந்த சந்தேகமும் ஏற்படவில்லை?
முதலில் இந்த சம்பவம் தொடர்பாக, கல்லுாரி முதல்வரோ, கண்காணிப்பாளரோ ஏன் போலீசில் புகார் அளிக்கவில்லை. இந்த வழக்கு விசாரணையில் பல முக்கியமான விஷயங்கள் வேண்டுமென்றே விடுவிக்கப்பட்டுள்ளது அப்பட்டமாக தெரிகிறது.
கல்லுாரி முதல்வராக இருந்த சந்தீப் கோஷிடம் போலீசார் எந்த விசாரணையும் நடத்தவில்லை. அவருடைய தரப்பு வாக்குமூலத்தை பதிவு செய்யவில்லை. இதற்கிடையே அவர் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அடுத்த சில மணி நேரங்களில் அவர் மற்றொரு கல்லுாரியின் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மூடிமறைப்பு
இதில் மாநில அரசுக்கு அவ்வளவு அவசரம் ஏன். ஒருவேளை அவர் தார்மீக அடிப்படையில் ராஜினாமா செய்திருந்தாலும், அதை ஏற்காமல் இருந்திருந்தாலும், உடனடியாக வேறு இடத்துக்கு மாற்ற வேண்டிய அவசியம் என்ன.
முதலில் இந்த விவகாரத்தில் உண்மையை மறைக்கப் பார்த்துள்ளனர். பின்னர் மூடி மறைக்க பார்த்துள்ளனர். பின்னர் திசை திருப்பப் பார்த்துள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது.
சந்தீப் கோஷ் எந்தக் கல்லுாரியிலும் தற்போதைக்கு பணியாற்றக் கூடாது. உடனடியாக அவர் நீண்ட விடுமுறையில் செல்ல வேண்டும். அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை, அவருக்கு எந்த பதவியும் வழங்கக் கூடாது. இல்லாவிட்டால், நாங்கள் இதில் உத்தரவு பிறப்பிக்க நேரிடும்.
சந்தீப் கோஷ் எந்தளவுக்கு அதிகாரம் உள்ளவராக இருந்தால், அவருக்காக அரசு வழக்கறிஞர் ஆஜராவார்? பதவி விலகிய சில மணி நேரத்தில் அவருக்கு மற்றொரு பதவி வழங்கப்படுகிறது என்றால், அது, அவருக்கு உள்ள அதிகாரத்தை, காட்டுவதாக உள்ளது.
மேலும், இந்த வழக்கின் தீவிரத்தை மாநில அரசு உணரவில்லை என்பதும் தெரிகிறது.
நம்பிக்கை இல்லை
மாணவர்கள் இத்தனை பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடைய உணர்வுகளுக்கு அரசின் பதில் என்ன. அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாநில போலீசின் விசாரணை நம்பிக்கை அளிப்பதாக இல்லை.
மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், உண்மை விவகாரம் வெளிவரும் வகையில், இந்த வழக்கை, சி.பி.ஐ., விசாரிப்பதே சரியாக இருக்கும். இன்று காலைக்குள் வழக்கு, சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, கல்லுாரி முதல்வர் சந்தீப் கோஷ், 15 நாட்கள் விடுமுறையில் சென்றுள்ளார்.
இந்நிலையில் இந்த வழக்கின் விபரங்களை மேற்கு வங்க போலீசாரிடம் இருந்து பெற்ற சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணையை துவக்கியுள்ளனர். இன்று கோல்கட்டா மருத்துவமனையில் விசாரணை நடத்த உள்ளனர்.