ADDED : ஜூன் 19, 2024 05:25 AM

பா.ஜ.,வை சேர்ந்த சி.டி.ரவி, 56, கட்சியிலும், ஆட்சியிலும் முக்கியமான பதவிகளில் இருந்தவர். மலை பிரதேசமான சிக்கமகளூரை சேர்ந்த இவர், முதன் முறையாக, 1999ல் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு, 982 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
அதன்பின், 2004ல் மீண்டும் போட்டியிட்டு 25,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, சட்டசபைக்குள் நுழைந்தார். 2008ல் 2வது முறையாக மீண்டும் வெற்றி பெற்றார். அப்போது எடியூரப்பா ஆட்சியில் உயர்கல்வி துறை அமைச்சராக பதவி வகித்தார்.
பின், 2013, 2018 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் தொடர்ந்து வென்று, நான்கு முறை எம்.எல்.ஏ.,வானார். முந்தைய பா.ஜ., ஆட்சியில் சுற்றுலா, கன்னட கலாசார துறை, இளைஞர் நலன், விளையாட்டு துறை அமைச்சராகவும் இருந்தார்.
தன்னுடைய ஹிந்துத்துவா பேச்சுகளால், தலைவர்களின் மனதில் இடம் பிடித்தார்.
தேர்தல் தோல்வியால் சோர்வடைந்திருந்த அவரிடம், விரைவில் நல்ல பதவி கிடைக்கும், லோக்சபா தேர்தலில் கவனம் செலுத்தும்படி அறிவுறுத்தியது. அதன்படி, சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், மாநிலத்தின் பல்வேறு தொகுதிகளுக்கு சென்று பிரசாரம் மேற்கொண்டார்.
எம்.எல்.சி., பதவி
அவரது சொந்த தொகுதியிலும் பா.ஜ., வெற்றி பெற்றது. இதற்கிடையில், சில நாட்களுக்கு முன், எம்.எல்.சி., பதவியும் அவரை தேடி வந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த அவர், அடுத்தகட்டமாக உயர்ந்த பதவி மீது கண் வைத்துள்ளார்.
சட்ட மேலவை எதிர்க்கட்சி தலைவராக இருந்த கோட்டா சீனிவாச பூஜாரி, உடுப்பி - சிக்கமகளூரு லோக்சபா தொகுதி எம்.பி.,யாகி விட்டார். இதனால், எம்.எல்.சி., பதவியை இரண்டு நாட்களுக்கு முன் ராஜினாமா செய்தார்.
இதனால், மேலவை எதிர்க்கட்சி தலைவர் பதவியை எப்படியாவது அடைய வேண்டும் என்று சி.டி.ரவி தீவிரமாக முயற்சித்து வருகிறார். அவருக்கு, பா.ஜ., தேசிய அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ் தயவு உள்ளது. எப்படியும் தனக்கு பதவி கிடைத்து விடும் என்ற மகிழ்ச்சியில் ரவி உள்ளார்.
எடியூரப்பாவுக்கு ஆதரவு
இதற்காக, சமீப காலமாக கட்சி போராட்டங்களில் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்கிறார். ஊடகத்தினரிடமும் காரசாரமாக பேசுகிறார். இடையில், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கும், அவருக்கும் கருத்து வேறுபாடு நிலவியது.
முட்டுக்கட்டை
ஆனால், 'போக்சோ' வழக்கில், எடியூரப்பாவை சிக்க வைக்க, காங்கிரஸ் அரசு முயற்சிப்பதாகவும், அவரை கைது செய்தால், பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்றும் சி.டி.ரவி ஆவேசமாக பேசினார். இதனால், அவருக்கு மேலவை எதிர்க்கட்சி பதவி கிடைப்பது எளிது என்று சொல்லப்படுகிறது.
அடுத்த மாதம், மழை கால சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் போது, இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.
இதற்கிடையில், அவருக்கு பதவி கிடைக்க கூடாது என்று, மேலவையின் மூத்த பா.ஜ., உறுப்பினர்கள் சிலர் முட்டுக்கட்டை போடுகின்றனர்.

