அன்று நேரு, இன்று ராகுல்: வந்தே மாதரம் பாடலை அவமதித்ததாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு
அன்று நேரு, இன்று ராகுல்: வந்தே மாதரம் பாடலை அவமதித்ததாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு
ADDED : டிச 08, 2025 04:49 PM

புதுடில்லி: '' வந்தே மாதரம் பாடலை அன்று முன்னாள் பிரதமர் நேரு அவமதித்தார். இன்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், விவாதத்தின் போது பார்லிமென்டுக்கு வராமல் அவமதித்துள்ளார்,'' என பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
நாட்டின் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு நிறைவு குறித்து இன்று லோக்சபாவில் சிறப்பு விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பங்கேற்கவில்லை.
இந்த விவாதத்தின் போது பிரதமர் மோடி பேசியதாவது: பார்லிமென்டில் முக்கியமான விஷயம் விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் இந்த அவையில் இல்லை. வந்தே மாதரம் பாடலுக்கு முதலில் நேருவும், தற்போது ராகுலும் அவமரியாதை செய்கின்றனர்.
காங்கிரஸ் இன்றும் வந்தே மாதரம் பாடலை அவமதித்து வருகிறது. வந்தே மாதரம் பாடலை சமரசம் செய்து முஸ்லிம் லீக் கட்சியுடன் சரண் அடைந்தது. வந்தே மாதரம் பாடலை துண்டு துண்டாக சிதைத்துவிட்டார்.
வந்தே மாதரம் பாடல் இஸ்லாமியர்களை தூண்டிவிடும் என நேதாஜிக்கு நேரு கடிதம் எழுதியிருந்தார். இது வந்தே மாதரத்தை ஏமாற்றியது ஆகும். தேசிய பாடல் நாசப்படுத்தப்பட்டு விட்டது.
சுதந்திர போராட்டத்தின் குரலாக வந்தே மாதரம் ஒலித்தது. நாட்டில் உள்ள ஒவ்வொருவருடன் ஒருங்கிணைந்துள்ளது. ஒவ்வொரு இந்தியரின் தீர்மானமாகவும் மாறியுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியின் போது, இந்தியாவை பலவீனமாகவும், சோம்பேறியாகவும், பயனற்றதாகவும் காட்டப்படுவது வழக்கமாக இருந்தது. அதேதொனியில் மக்கள் பேசி வந்தனர். பங்கிம், எழுதிய பாடல் நாட்டின் ஆன்மாவை அசைத்தது. நாட்டு மக்களை விழித்தெழ செய்தது. நமது வரலாற்றையும், ஆயிரக்கணக்கான கலாசாரத்தையும் புத்துயிர்பெற செய்தது.
ஒட்டுமொத்த சுதந்திர போராட்ட இயக்கத்திற்குஊக்கம் அளிக்கும் தாரமந்திரமாகவும், சக்திவாய்ந்தமந்திரமாகவும் வந்தே மாதரம் பாடல் இருந்தது. எதிர்கால தலைமுறையினருக்காக அந்த பாரம்பரியத்தை மீட்டெடுக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
வந்தே மாதரம் அரசியல் விடுதலைக்கான மந்திரமாக மட்டும் அமையவில்லை. நமது சுதந்திரத்திற்காக மட்டும் இல்லை. அதையும் தாண்டியது.
இவ்வாறு பிரதமர் மோடிபேசினார்.

