எஸ்.ஐ., பரசுராம் மரண வழக்கு அறிக்கை கேட்கும் மத்திய அரசு
எஸ்.ஐ., பரசுராம் மரண வழக்கு அறிக்கை கேட்கும் மத்திய அரசு
ADDED : செப் 06, 2024 05:51 AM
யாத்கிர்: எஸ்.ஐ., பரசுராம் மரணம் தொடர்பாக அறிக்கை அளிக்கும்படி கர்நாடக அரசுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.
யாத்கிர் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் எஸ்.ஐ.,யாக இருந்தவர் பரசுராம், 34. கடந்த மாதம் 2ம் தேதி திடீரென உயிரிழந்தார்.
சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் இருந்து, யாத்கிர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்ய பரசுராமிடம், யாத்கிர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., சன்னரெட்டி பாட்டீல் துன்னுார், அவரது மகன் பாம்பண்ண கவுடா ஆகியோர் 30 லட்சம் ரூபாய் கேட்டு நெருக்கடி கொடுத்ததுடன், ஜாதியை சொல்லித் திட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து எம்.எல்.ஏ., அவரது மகன் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவானது. இருவரும் தலைமறைவாகிவிட்டனர். இந்த வழக்கை சி.ஐ.டி., விசாரிக்க அரசு உத்தரவிட்டு உள்ளது. யாத்கிர் சென்று சி.ஐ.டி., - ஏ.டி.ஜி.பி., பி.கே., சிங் விசாரணை நடத்தினார்.
இதற்கிடையில் இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்கக் கோரி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, மத்திய தொழிலாளர் இணை அமைச்சர் ஷோபா கடிதம் எழுதி இருந்தார்.
வழக்கு தொடர்பான ஆவணங்கள், இதுவரை நடந்த விசாரணை குறித்து அறிக்கை அளிக்கும்படி, கர்நாடக தலைமை செயலர் ஷாலினிக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.