வெளிநாட்டவருக்கு பி.எப்., ரத்து மத்திய அரசு ஆலோசனை
வெளிநாட்டவருக்கு பி.எப்., ரத்து மத்திய அரசு ஆலோசனை
ADDED : மே 08, 2024 02:12 AM
புதுடில்லி, வெளிநாட்டவரை, பி.எப்., எனப்படும் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் சேர்க்கும் சட்டப் பிரிவு செல்லாது என்ற கர்நாடக உயர் நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்துவது குறித்து, ஆலோசனை நடந்து வருவதாக, ஈ.பி.எப்.ஓ., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தெரிவித்துள்ளது.
வருங்கால வைப்பு நிதி சட்டம் மற்றும் ஊழியர்கள் ஓய்வூதிய திட்ட சட்டங்களில், வெளிநாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கான சிறப்பு பிரிவு உள்ளது. இதன்படி, மாதச் சம்பளம், 15,000 ரூபாய்க்கு மேல் வாங்கும் வெளிநாட்டவர்களும், இந்த திட்டத்தில் சேர்க்கப்படுகின்றனர். கடந்த, 2008 முதல் இது நடைமுறையில் உள்ளது.
சமூக பாதுகாப்பு தொடர்பாக, 21 நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு சமூகப் பாதுகாப்பு தொடரும் வகையில், பரஸ்பரம் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கர்நாடகா உயர் நீதிமன்றம் சமீபத்தில் அளித்த உத்தரவில், வெளிநாட்டைச் சேர்ந்தவர்களை, இந்த ஓய்வூதிய திட்டங்களில் சேர்ப்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், வெளிநாடுகளுடன் செய்யப்பட்ட சமூக பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றும் பி.எப்., சட்டத்தின் சிறப்பு பிரிவுகளின் அடிப்படையில், உயர் நீதிமன்ற உத்தரவை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தெரிவித்து உள்ளது.

