100 ஆண்டுகள் ஆனாலும் ஆர்ஜேடியின் காட்டாட்சியை மக்கள் மறக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி
100 ஆண்டுகள் ஆனாலும் ஆர்ஜேடியின் காட்டாட்சியை மக்கள் மறக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி
UPDATED : அக் 23, 2025 06:39 PM
ADDED : அக் 23, 2025 06:37 PM

புதுடில்லி: '' எதிர்க்கட்சிகள் எவ்வளவு மறைத்தாலும், பீஹாரில் ஆர்ஜேடியின் காட்டாட்சியை மக்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள்,'' எனப் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பீஹார் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பாஜவினருடன் கலந்துரையாடிய மோடி கூறியதாவது: ஜனநாயகத்தின் திருவிழாவை பீஹார் கொண்டாட உள்ளது. மாநிலத்தின் வளர்ச்சிக்கு புது அத்தியாயம் எழுதுவதற்காக நடக்கும் தேர்தல் ஆகும். இதில் பீஹார் இளைஞர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. எதிர்க்கட்சிகள் எவ்வளவு மறைத்தாலும், பீஹாரில் நடந்த காட்டாட்சியை 100 ஆண்டுகள் ஆனாலும் மக்கள் மறக்க மாட்டார்கள்.
காட்டாட்சி நடந்ததை இளைஞர்களுக்கு முதியவர்கள் எடுத்து சொல்ல வேண்டும். இதனை பாஜவினர் உறுதி செய்ய வேண்டும். ஸ்திரத்தன்மை இருக்கும் போது வளர்ச்சி வேகம் பெறும். இது தான் பீஹாரில் தேஜ அரசின் பலம். இதனால் தான் பீஹார் வேகம் எடுத்துள்ளது. மீண்டும் தேஜ கூட்டணி அரசு வேண்டும் என இளைஞர்கள் உற்சாகமாக சொல்கின்றனர்.
ஒரு ஓட்டில் அனைத்து சக்திகளும் அடங்கி உள்ளன. ராமர் கோயில் கட்டுவதற்கான சூழ்நிலையை மக்கள் அளித்த ஓட்டு தான் ஏற்படுத்தியது. ஆப்பரேஷன் சிந்தூர் எடுக்கப்பட்டதுடன், நக்சல் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு நாடு வேகமாக வளர்ச்சி பெறுகிறது. இதுதான் ஓட்டின் வலிமை மாநிலத்தில் காட்டாட்சியை அகற்றிய மக்கள், மீண்டும் எந்த சூழ்நிலையிலும் அந்த ஆட்சி மீண்டும் வருவதை விரும்பவில்லை. இவ்வாறு பிரதமர் பேசினார்.