ADDED : ஜூலை 04, 2026 10:01 PM

புதுடில்லி: ‘டெலிகிராம்’ தகவல் பரிமாற்ற செயலியில், திரைப்படங்கள், ஓ.டி.டி., உள்ளடக்கங்களை சட்டவிரோதமாக பகிரும் சேனல்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து, 15 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி, அந்நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படும், ‘டெலிகிராம்’ செயலி மூலம், புதிய திரைப்படங்கள், ஓ.டி.டி., தளங்களின் உள்ளடக்கங்கள் சட்டவிரோதமாக பகிரப்படுகின்றன.
இதற்கு எதிராக தொடர் புகார்கள் எழுந்ததையடுத்து, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை விசாரணை மேற்கொண்டது. இதில், 3,142 சேனல்கள் சட்டவிரோதமாக உள்ளடக்கங்களை பகிர்வது உறுதியானது. இதுதொடர்பாக, ‘டெலிகிராம்’ நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் விடுத்துள்ள நோட்டீஸ்:
காப்புரிமையை மீறி சட்டவிரோதமாக திரைப்படங்கள், ஓ.டி.டி., உள்ளடக்கங்களை வினியோகிக்கும், 3,142 சேனல்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த சேனல்களை முடக்குவதோடு நிறுத்தாமல், இந்த சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் குழுக்கள், அட்மின்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கு முன், 3,000க்கும் மேற்பட்ட, ‘டெலிகிராம்’ சேனல்கள் மீது மத்திய அரசு ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே, சட்டவிரோத செயலில் ஈடுபடும் சேனல்களை, அரசு அடையாளம் காட்டும் வரை, ‘டெலிகிராம்’ நிறுவனம் காத்திருக்காமல், உரிய கவனத்துடன் செயல்பட வேண்டும். சம்பந்தப்பட்ட சேனல்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
