தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/உடைகிறதா பஞ்சாப் காங்.?

உடைகிறதா பஞ்சாப் காங்.?

உடைகிறதா பஞ்சாப் காங்.?


ADDED : ஜூலை 04, 2026 10:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 04, 2026 10:04 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கும் பஞ்சாபில், 2027 பிப்ரவரியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. எப்படியும் பஞ்சாபில் வெற்றி பெற வேண்டும் என, காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, பஞ்சாப் காங்., தலைவராக இருந்த அம்ரிந்தர் சிங் வாரிங், மீண்டும் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். 2022லிருந்து மாநில தலைவராக இருந்த இவரை, மீண்டும் தலைவராக்கி இருப்பது கட்சி தலைவர்களுக்கு பிடிக்கவில்லை.

இந்நிலையில், காங்., - எம்.பி.,யும், முன்னாள் துணை முதல்வருமான சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசி உள்ளார். இது காங்கிரசில் பரபரப்பையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது. பா.ஜ., வெற்றி பெற மற்ற கட்சி தலைவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் அமித் ஷா ஈடுபட்டுள்ள நிலையில், இந்த சந்திப்பு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

'பஞ்சாப் பாதுகாப்பு குறித்து தான் இந்த சந்திப்பு. அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை' என, சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா கூறினாலும், இதை யாரும் நம்ப தயாராக இல்லை. இன்னொரு பக்கம், காங்., - எம்.பி.,யும், முன்னாள் மத்திய அமைச்சருமான மணீஷ் திவாரி, சமீப காலமாக ராகுலுக்கு எதிராக பேசி வருகிறார். இதற்கு காரணம், பஞ்சாப் காங்கிரசில் இவர் ஓரம் கட்டப்பட்டுள்ளார். இவரும், அமித் ஷாவை சந்தித்துள்ளார் என, பேச்சு அடிபடுகிறது.

பஞ்சாப் காங்கிரசின் பிரசார குழுவின் தலைவரும், முன்னாள் முதல்வரும், எம்.பி.,யுமான சரண்ஜித் சிங் சன்னிக்கும், அம்ரிந்தர் சிங் வாரிங்கை மாநில தலைவராக நியமித்தது பிடிக்கவில்லை. பஞ்சாப் காங்., - எம்.பி.,க்கள் சிலர், நம் ஊர் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை போல ராஜினாமா செய்வர் என, சொல்லப்படுகிறது. 'இதெல்லாம் அமித் ஷாவின் வேலை. இதனால் சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே, பஞ்சாபில் காங்., உடையும் அபாயம் உள்ளது' என, காங்., தொண்டர்கள் நொந்து போயுள்ளனர்.

உ.பி.,யில் காங்., தனித்து போட்டி?

முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில், அடுத்தாண்டு பிப்ரவரியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. 2024 லோக்சபா தேர்தலில், சமாஜ்வாதி, காங்., கூட்டணி, 43 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று, பா.ஜ.,வுக்கு பின்னடவை ஏற்படுத்தியது. சமாஜ்வாதி, 37 தொகுதிகளிலும், காங்., 6 தொகுதிகளிலும் வென்றது. இதனால், பா.ஜ.,விற்கு மத்தியில் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணி கட்சி தயவில் மீண்டும் பிரதமரானார் மோடி.

கடந்த 2022 உ.பி., சட்டசபை தேர்தலில், தனியாக, 399 தொகுதிகளில் போட்டியிட்ட காங்., 2 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. ஆனால், 2024 லோக்சபா தேர்தலில் சமாஜ்வாதியுடன் கூட்டணி அமைத்ததால் அக்கட்சி பெரும் வெற்றி பெற்றது.

'கடந்த முறை சமாஜ்வாதி அண்ணனாகவும், காங்., தம்பியாகவும் இருந்தது. ஆனால், இந்த முறை நாம் அண்ணனாக செயல்படுவோம்' என, உ.பி., மாநில காங்., தலைவராக நியமிக்கப்பட்ட ராஜேந்திர பால் கவுதம் தொண்டர்களிடையே பேசியுள்ளார். 170 தொகுதிகளில், காங்கிரசின் வெற்றி வாய்ப்பு குறித்து, 'சர்வே' எடுக்க சொல்லியுள்ளார் கவுதம். உ.பி.,யில் 403 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

பா.ஜ.,வை போல, மாயாவதியின் பகுஜன் சமாஜ் தலைவர்களை, தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் காங்., ஈடுபட்டுள்ளது. முஸ்லிம், தாகூர், பிராமணர்கள், தலித் என, அனைத்து சமூகத்தினரையும் கவர, புதிய மாநில காங்., தலைவர் முயன்று வருகிறார்.

கடைசியாக, 1989ல் உ.பி.,யை காங்., ஆண்டது. அதன்பின் தொடர்ந்து தோல்வி தான். தற்போது பிரச்னை என்னவெனில், சமாஜ்வாதி காங்கிரசுக்கு அதிக தொகுதிகளை விட்டுக்கொடுக்குமா? அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் முதல்வர் கனவில் உள்ளார். இதனால், இரண்டு கட்சிகளுக்கிடையே நிச்சயம் பிரச்னை வரும். இது வெற்றிக்கு உதவும் என, பா.ஜ., கணக்கு போட்டுள்ளது.

கவலையில் ஆர்.எஸ்.எஸ்.,

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில், ராமர் கோவில் கட்ட ஒரு பெரும் இயக்கமே நடத்தி போராடி, கடைசியில் கோவிலையும் கட்டி முடிக்க, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு பெரும் உதவியாக இருந்தது. ஆனால், சமீபத்தில் ராமர் கோவில் உண்டியல் திருட்டு விவகாரம், ஆர்.எஸ்.எஸ்., தலைவர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., என்றாலே ஒழுக்கம், கடமை, நேர்மை என, சொல்வது வழக்கம். இந்த குணங்கள் இப்போது ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் குறைந்து வருகிறதோ என்பதை, உண்டியல் திருட்டு அம்பலப்படுத்தி உள்ளது.

இந்த திருட்டு விவகாரம், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத்தை கடுப்பாக்கியுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட நபர் எவ்வளவு பெரிய அதிகார மையமாக இருந்தாலும் சரி, அவர்களை கைது செய்தே ஆக வேண்டும் என, கூறியுள்ளார். இது தொடர்பாக, பிரதமர் மோடியிடமும் அவர் பேசி உள்ளாராம்.

ஏற்கனவே உ.பி., அரசின் சிறப்பு புலனாய்வு குழு, எட்டு பேரை கைது செய்துள்ளது. ராம ஜென்மபூமி அறக்கட்டளையின் பொதுச்செயலராக இருந்தவர், சம்பத் ராய். இவர், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பைச் சேர்ந்தவர். கோவில் கட்டுமான பணிகளை மேற்பார்வையிட, அப்போது இவரை செயலராக நியமித்தது மத்திய அரசு. இப்போது திருட்டு விவகாரத்தில் தார்மிக பொறுப்பேற்று பதவி விலகியுள்ளார்.

பொதுவாக, பிரபல கோவிலின் அறக்கட்டளை எனில், அந்த மாநில முதல்வர், அதில் உறுப்பினராக முக்கிய பதவி வகிப்பார். ஆனால், அயோத்தி அறக்கட்டளையில், முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு பதவி அளிக்கவில்லை. அவர், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை சேர்ந்தவர் அல்ல என்பதால் தான், பதவி கொடுக்கவில்லை என, சொல்லப்பட்டது. ஆனால் இப்போது, ஆர்.எஸ்.எஸ்.,சைச் சேர்ந்த சம்பத் ராய், இந்த திருட்டிற்கு காரணமாகி விட்டார். விரைவில், அவர் கைதாகலாம் என, கூறப்படுகிறது.

***

தெலுங்கானாவில் பிரச்னை!

பஞ்சாப், உ.பி.,யை தொடர்ந்து, தெலுங்கானாவிலும் காங்கிரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இங்கு காங்., ஆட்சியில் இருந்தாலும், பிரச்னை தொடர்கிறது. முதல்வர் ரேவந்த் ரெட்டி அமைச்சரவையில் வனம், சுற்றுச்சூழல் மற்றும் அறநிலையத் துறை அமைச்சராக இருப்பவர் கோண்டா சுரேகா.

கடந்த வாரம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. வெளிநாடு பயணம் மேற்கொண்டிருந்த இவர், அமைச்சரவைக் கூட்டம் நடக்கும் தினத்திற்கு முன்தினம், ஹைதராபாத் திரும்பி விட்டார். எனினும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இது, கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. 'முதல்வர் ரேவந்த் ரெட்டி உடனான பிரச்னையால் தான், கூட்டத்தில் சுரேகா பங்கேற்கவில்லை' என, கட்சிக்குள் பேசப்படுகிறது. இதற்கு காரணம் ஒரு கோவில்.

ஹைதரபாதிலிருந்து, 60 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ளது, லட்சுமி நரசிம்ம ஸ்வாமி எழுந்தருளியுள்ள யாதகிரிகுட்டா என்கிற, 1,000 ஆண்டுகள் பழமையான குகைக்கோவில். இந்த கோவில் அறக்கட்டளைக்கு, சிலரை நியமிக்கும்படி முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு கடிதம் எழுதியிருந்தார் அறநிலையத் துறை அமைச்சர் சுரேகா. ஆனால், முதல்வரோ துறை அமைச்சரை கலந்து ஆலோசிக்காமல், தன் விருப்பப்படி ஆட்களை நியமித்துள்ளார். இது, அமைச்சர் சுரேகாவுக்கு கோபத்தை ஏற்படுத்த, அமைச்சரவை கூட்டத்தை புறக்கணித்ததாக கூறப்படுகிறது.

ஏற்கனவே காங்., - எம்.எல்.ஏ., ஒருவர், இந்த கோவில் அறக்கட்டளைக்கு சிபாரிசு செய்தவர்களை, முதல்வர் ரேவந்த் ரெட்டி நிராகரித்து விட்டார். இதனால் அந்த, எம்.எல்.ஏ.,வும் கோபத்தில் உள்ளாராம். முதல்வர் தரப்போ, 'இதெல்லாம் ஒரு பிரச்னையே அல்ல; அரசியலில் இதெல்லாம் சகஜம்' என்கிறது.

தொடர்புக்கு: ndussh@dinamalar.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us